×

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு தமிழகத்தில் 53% பேர் வேலை இழப்பு: வீட்டுக்கு ஒருவர் வருமானம் இழந்த பரிதாபம்

சென்னை: கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் 53 சதவீதம்பேர் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கால் கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டு வழியில்லாமல் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கிடையே ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தினர். போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் சிறு வியாபாரிகள் முதல் பெரு வியாபாரிகள் வரை வியாபாரம் பாதிக்கப்பட்டு முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

 நகர்புறங்களில் 50 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 56 சதவீதம்பேரும் வேலை இழந்துள்ளனர். சராசரியாக 53 சதவீதம் மக்கள் வேலை இழந்துள்ளனர். சென்னையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் அல்லது இருவர் பணியிழந்த தகவல் தெரியவந்துள்ளது. கடந்த 3 மாத காலக்கட்டத்தில் 92 சதவீதம் கிராமபுறங்களிலும், 95 சதவீதம் நகர்புறங்களிலும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகளில் 3 முதல் 5 சதவீதம் பேர் ஊரடங்கால் வேலை இழந்துள்ள பரிதாபமும் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொருளாதாம் மற்றும் புள்ளி விபரத்துறை ஜூன் மாதம் 3வது வாரத்தில் தொலைபேசி மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 10,031 பேரிடம் எடுத்த கணக்கில் இந்த பாதிப்பு தெரியவந்துள்ளது. வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அரசு இந்த இக்கட்டான நிலையிலிருந்து மக்களுக்கு உரிய பொருளாதார உதவிகளை தர வேண்டும். அப்போதுதான் எதிர்மறையான காரியங்கள் நடைபெறாதவாறு தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய மாத சம்பளம் பெறுபவர்களில் 13 சதவீதம்பேர் பணியிழந்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்த கிராமப்புற மக்களில் 37 சதவீதம்பேர் பிப்ரவரி மாதமே வேலை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஏப்ரல் கடைசி வாரத்தில் 64 சதவீதம்பேருக்கு வேலை உறுதி திட்டத்தில் வேலை தரப்பட்டது. ஆனால், இன்னும் முழு அளவில் இந்த திட்டத்தில் வேலை தரப்படவில்லை. வேலை இழப்பு, வருமானம் இல்லாததால் பெரும்பாலான வீடுகளில் செலவுகள் குறைக்கப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னையில் சராசரியாக மாதம் ரூ.18,996 வருமானமுள்ள நபரின் வருமானம் பிப்ரவரி முதல் மே வரையிலான காலக்கட்டத்தில் மாதம் ரூ.9757 ஆக குறைந்துள்ளது.ஈரோடு, ராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் இந்த சராசரி அளவு வெகுவாக குறைந்துள்ளது. உரிய பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில்தான் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களை சகஜ நிலைக்கு கொண்டு வர முடியும். அதற்கு உரிய வளர்ச்சி திட்டங்கள், நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags : 53% ,Tamil Nadu , Curfew, livelihood damage, in Tamil Nadu, 53%, job loss
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து