×

தேசிய பணியாளர் தேர்வு முகமை நடத்தும் தேசிய தகுதி தேர்வை 12 மொழியில் எழுதலாம்: எத்தனை முறையும் பங்கேற்கலாம்

புதுடெல்லி: மத்திய அரசு பணிகளுக்கான தகுதித் தேர்வை நடத்துவதற்காக புதிதாக அமைக்கப்படும் ‘தேசிய அரசு பணியாளர் தேர்வு முகமை’, 12 மொழிகளில் தேர்வு நடத்த உள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்காக அந்தந்த துறைகள் தனித்தனியாக போட்டித் தேர்வுகளை நடத்தி வந்தன. இந்நிலையில், இவற்றுக்கு தேசிய அளவில் ஒரே தகுதி தேர்வு முறையை அறிமுகம் செய்ய, மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி, இத்தேர்வை நடத்துவதற்காக, ‘தேசிய அரசு பணியாளர் தேர்வு முகமை’ (என்ஆர்ஏ) என்ற அமைப்பு நிறுவப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் அளித்தது.

இந்த முகமை மூலமாக ஆண்டுக்கு இரண்டு முறை தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் பெறும் மதிப்பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு செல்லும். அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என விரும்புபவர்கள் மீண்டும் இந்த தேர்வை எழுதவும் வாய்ப்பு அளிக்கப்படும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த தேர்வை எழுதி, அதில் பெறும் மதிப்பெண்கள் மூலமாக தகுதியை உயர்த்திக் கொள்ளலாம். மேலும், தேசிய முகமை நடத்தும் இந்த பொது தகுதி தேர்வு, 12 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. பின்னர், படிப்படியாக பிற மொழிகளும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* முகமையின் கீழ் 50 அமைப்புகள்
நாட்டில் தற்போது பணியாளர்களை தேர்வு செய்வதற்காக பல்வேறு அமைப்புகள் போட்டித் தேர்வுகள் நடத்தி வருகின்றன. இவற்றில் 50 அமைப்புகள், தேசிய அரசு பணியாளர் தேர்வு முகமையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : National Eligibility Test ,National Personnel Selection Agency , National Personnel Selection Agency, conducting, National Eligibility Test, 12 languages can be written, how many times, can participate
× RELATED இளநிலை பட்டப்படிப்பில் 75% மதிப்பெண்...