×

மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் ஏரியில் அமைக்கப்படும் விளையாட்டு மைதானம்: இளைஞர்கள், மாணவர்கள் அதிருப்தி

செய்யூர்: மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில். இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் ஏரியில் அமைப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழக அரசின் உத்தரவின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஊரக வளர்ச்சித்துறையின் பங்களிப்போடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் அம்மா விளையாட்டு மைதானம் அமைத்து மாணவர்கள், இளைஞர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்கின்றனர். அதில், கபடி, கைப்பந்து, பேட்மின்டன், கிரிக்கெட் உள்பட பல்வேறு மைதானங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்நிலையில்,செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில், இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு, விடுமுறை காலங்களில் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானம் இல்லாததால் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இதையொட்டி, அரியனூர் ஊராட்சியில் தற்போது, சுமார் 20 சென்ட் அளவில் விளையாட்டு மைதானம் புதிதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மைதானம் ஏரியின் அருகில், அரியனூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்படுகிறது. புதிதாக உருவாக்கப்படும் இந்த மைதானமும் கிராமத்தையொட்டி அமைக்காமல், சுமார் 1 கிமீ தொலைவில், ஊராட்சிக்கு சொந்தமான ஏரியில் அமைக்கப்படுகிறது.

இதனால், மழை காலங்களில், அங்கு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏரியில் அமைக்கும் மைதான பணிகளை கைவிட்டு, கிராமத்திலேயே மைதானம் அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.இல்லாவிட்டால், எந்த நோக்கத்துக்காக மைதானம் அமைக்கப்படுகிறதே, அது நிறைவேறாமல் வீணாகும். மேலும், விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கும், விரக்தி ஏற்படும் என விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், மேற்கண்ட பகுதியில் ஆய்வு நடத்தி ஊராட்சியின் மைய பகுதியில், விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

* காணாமல் போக வாய்ப்பு
கடந்த திமுக ஆட்சியில் அண்ணா 100வது பிறந்த  நாளில் அனைத்து ஊராட்சிகளிலும் ‘இளைஞர் விளையாட்டு மைதானம்’ அமைக்கப்பட்டது. அப்போது, அரியனூர் ஊராட்சி குளத்தின் அருகே சுமார் 20 சென்ட் பரப்பளவில் மைதானம் அமைக்கப்பட்டது. அந்த மைதானத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், தற்போது அந்த இடம் தெரியாமல், கம்பங்கள் ஏதும் இன்றி புதர் மண்டி கிடக்கிறது. அதோபோல், தற்போது அமைக்கப்படும் மைதானமும், தண்ணீரில் மூழ்கி மாயமாகும் நிலை உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : Madurantakam Union Playground ,lake ,playground ,Madurantakam Union A , Madurantakam Union, Ariyanur Panchayat, set up on the lake, playground, youth, students, dissatisfaction
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு