×

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பைனலில் பேயர்ன் மியூனிக்

லிஸ்பன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரை இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக்யூ லியோனை வீழ்த்திய பேயர்ன் மியூனிக் அணி 11வது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் பார்சிலோனா அணிக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்த பேயர்ன் அணி வீரர்கள், நேற்றைய அரை இறுதியிலும் அதே வேகத்தை தொடர்ந்தனர். லியோனின் கோல் பகுதியை தொடர்ந்து முற்றுகையிட்டதற்கு பலனாக செர்ஜ் கெனப்ரி ஆட்டத்தின் 18வது மற்றும் 33வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.

முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் பேயர்ன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் அந்த அணியின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறந்தது. லியோனின் முயிற்சிகள் கொஞ்சம் கூட எடுபடவில்லை. ஆட்டம் முடிய 2 நிமிடங்கள் இருந்தபோது பேயர்ன் அணியின் ராபர்ட் லெவண்டோவஸ்கி ஒரு கோல் அடித்தார். விறுவிறுப்பான ஆட்ட நேர முடிவில் பேயர்ன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் லியோனை வீழ்த்தி 11வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதுமட்டுமல்ல, நடப்பு சீசனில் தொடர்ந்து 10வது வெற்றியை பேயர்ன் பதிவு செய்துள்ளது. இந்திய நேரப்படி ஆக.24ம் தேதி அதிகாலை லிஸ்பனில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியுடன்  பேயர்ன் மியூனிக் அணி மோத உள்ளது. 


Tags : final ,Bayern Munich ,European Champions League , European Champions League, Final, Bayern Munich
× RELATED சில்லிபாயின்ட்..