×

ட்வீட் கார்னர்… 130 கோடி நன்றி! தோனிக்கு பிரதமர் கடிதம்

இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டனாக, மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக சாதனை படைத்த எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி 2 பக்க கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தோனி, ‘ஒரு கலைஞன், ராணுவ வீரர், விளையாட்டு வீரர் போன்றவர்கள் பாராட்டுகளுக்காகவே ஏங்குவார்கள். தங்களின் கடின உழைப்பு மற்றும் தியாகம் அனைவராலும் பாராட்டப்படுவது ஒன்றே அவர்களுக்கு திருப்தி அளிக்கும். பிரதமர் மோடியின் பாராட்டு மற்றும் நல்வாழ்த்துகளுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில்… ‘உங்களுடைய வழக்கமான, ஊகிக்க முடியாத ஸ்டைலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஒட்டுமொத்த தேசத்தையும் அதுபற்றி ஆர்வமாகப் பேச வைத்துவிட்டீர்கள். உங்கள் முடிவு 130 கோடி இந்தியருக்கும் ஏமாற்றம் அளித்தாலும், இந்திய கிரிக்கெட்டுக்காக நீங்கள் அளித்த பங்களிப்புக்கு என்றென்றும் அவர்கள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். புதிய இந்தியாவின் லட்சிய வேட்கைக்கான அடையாளமாகவே நீங்கள் விளங்குகிறீர்கள். இங்கே இளைஞர்கள் தங்களின் குடும்பப் பெயர்களால் கிடைக்கும் வெற்றியை விடவும், தங்களுக்கென் தனி பெயரையும் சுயமான அடையாளத்தையும் பெறவே விரும்புகிறார்கள்.

எந்த இலக்கை நோக்கி நாம் முன்னேறுகிறோம் என்பதை உணர்ந்திருக்கும் வரை, நாம் எங்கிருந்து வந்தோம் என்பது ஒரு பொருட்டே அல்ல. உங்களின் இந்த தனித்துவமான உத்வேகம்தான் பல இளைஞர்களுக்கும் ஊக்கமளித்து முன்னுதாரணமாக விளங்குகிறது. உங்களின் ஹேர்ஸ்டைல் எதுவாக இருந்தாலும், வெற்றி அல்லது தோல்வியை சமமாகப் பாவித்து அமைதியான மனநிலையை வெளிப்படுத்தும் அந்த தலைமைப் பண்பே ஒவ்வொரு இளைஞனுக்கும் முக்கியமானது. ஒரு குக்கிராமத்தில் மிக எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து, தேசிய அரங்கில் உங்களுக்கென ஒரு பெயரையும் புகழையும் பெற்றிருக்கிறீர்கள்.

அதை விட முக்கியமாக, உங்கள் வெற்றிகளால் இந்தியாவை பெருமைகொள்ளச் செய்திருக்கிறீர்கள். இந்திய ராணுவத்தின் மீது தாங்கள் வைத்திருக்கும் மதிப்பும், வீரர்கள் மீதான அன்பும் அக்கறையும் பிரமிப்பூட்டுகிறது. மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவா உங்களுடன் இனி அதிக நேரத்தை செலவழிக்க முடியும் என நம்புகிறேன். அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள தெரியப்படுத்தவும். உங்களின் அனைத்து எதிர்கால முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். இவ்வாறு தோனிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags : Tweet Corner ,Dhoni , Tweet Corner, 130 crore Thanks !, Prime Minister letter to Dhoni
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...