×

காவலர் சுப்பிரமணியனின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம்; கண்ணீர் கடலில் மிதந்த பண்டாரவிளை கிராமம்: மனைவி கதறலில் சோகத்தில் மூழ்கிய மக்கள்

ஏரல்: வல்லநாடு மலையடிவாரத்தில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியனின் உடல் 30 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலைக் கண்டு பண்டாரவிளை கிராமம் கண்ணீரில் மிதந்தது. காதல் மனைவி கதறலில் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள மங்கலகுறிச்சியைச் சேர்ந்தவர் வெள்ளூர் துரைமுத்து (30). இவர் மீது தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. பேட்டை அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் தலைமறைவானார்.

இந்நிலையில் துரைமுத்து வல்லநாடு மலையடிவாரத்தில் பதுங்கியிருப்பதாக வைகுண்டம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில், துரைமுத்துவை பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் இடம் பெற்றிருந்த ஆழ்வார்திருநகரி போலீஸ்காரர் சுப்பிரமணியனும் துரைமுத்துவை பிடிக்க வல்லநாடு மலையடிவாரத்திற்கு சென்றார். தனிப்படையினர் துரைமுத்து பதுங்கியிருந்த இடத்தை நெருங்கி அவரை விரட்டிய போது அவர் வீசிய வெடிகுண்டு காவலர் சுப்பிரமணியன் மீது விழுந்து வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு குண்டு வெடித்ததில் படுகாயம் அடைந்த துரைமுத்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த துரைமுத்துவின் தம்பி சாமிநாதன், வனத்துறை ஊழியர் சுடலைக்கண்ணு, சிவராமலிங்கம் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். காவலர் சுப்பிரமணியனின் உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சொந்த ஊரான பண்டாரவிளைக்கு கொண்டு வரப்பட்டது. தென்மண்டல ஐ.ஜி. முருகன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம். தாமோர், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் ஆகியோர் சுமந்து வந்தனர்.

தொடர்ந்து தமிழக டிஜிபி திரிபாதி, தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி, வைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி. சண்முகநாதன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனபிரியா, ஏரல் தாசில்தார் அற்புதமணி உள்ளிட்ட பலர் சுப்பிரமணியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் காவலர் சுப்பிரமணியனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக சுப்பிரமணியனின் உடலைப் பார்த்து மனைவி புவனேஸ்வரி, கைக்குழந்தை சிவஹரிஸ், தந்தை பெரியசாமி ஆகியோர் கதறியது, அங்கு நின்ற அனைவரின் மனதையும் உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் பண்டாரவிளை கிராமத்தையே கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. அந்தப்பகுதி மக்கள் இந்த சோகத்திலிருந்து மீள பல மாதங்களாகும் என தெரிவித்தனர்.

தைரியமான போலீஸ்காரர்
மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ சுப்பிரமணியன் தைரியமான, புத்திக்கூர்மையுள்ள போலீஸ்காரராக இருந்தார். அதனால் தான் ரவுடிகளை பிடிக்கும் சிறப்பு காவல்படையில் குறுகிய காலத்திலேயே இடம் பெற்றார். அவருடைய வேலையில் இதுவரை எந்த குறைபாடும் இருந்தது கிடையாது.’’ என்றார்.

போஸ்டர் ஒட்டிய பெண் போலீசார்
சுப்பிரமணியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அச்சடிக்கப்பட்டிருந்த சுவரொட்டிகளை இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த ஆண் காவலர்களுடன் சேர்ந்து பெண் போலீசாரும் ஊர் முழுவதும் ஒட்டினர். அவரது மனைவி புவனேஸ்வரியின் கதறலை பார்த்த பெண் போலீசாரும் கண்கலங்கி கதறி அழுதனர்.

காதல் மனைவியால் காவலரானவர்
சுப்பிரமணியன் காவல் பணிக்கு வருவதற்கு முன்பு சகோதரர்களுடன் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். சாயர்புரம் பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றபோது சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருடைய மகள் புவனேஸ்வரியை காதலித்துள்ளார். அவரின் தூண்டுதலின் பேரில் சுப்பிரமணியன் காவலர் பணிக்கான பயிற்சியை பெற்று 2017ல் காவலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் 2018ம் ஆண்டு சுப்பிரமணியனுக்கும், புவனேஸ்வரிக்கும் இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

Tags : loss ,village ,sea ,Policeman Subramaniam , Policeman Subramanian, buried with police honors, Bandaravilai village
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...