விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடும் சூழல் தற்போது இல்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடும் சூழல் தற்போது இல்லாத நிலையில், தெருவோரத்தில் விநாயகர் சிலை வைப்பது, ஊர்வலம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் இரவு பகலாக பாடுபடுகிறார்கள். களத்தில் இறங்கி பணி செய்பவர்கள் தங்களது உயிரை துச்சமென நினைத்து பணிபுரிந்து வருகின்றார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் குறை சொல்வதை விட அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர குறை சொல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. விநாயகர் சதுர்த்தியை ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி மட்டுமின்றி இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகிறோம். பல தெருக்களின் ஓரங்களில் இந்து அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர் விநாயகர் சிலையை வைத்துக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்தாண்டு அந்த சூழ்நிலை இல்லை. மத்திய அரசு தெளிவாக விதிமுறைகளை கொடுத்துள்ளது.

ஆகவே தான் மாவட்ட ஆட்சியர் கடந்த 7 நாட்களுக்கு முன்பு அனைத்து அமைப்புகளையும் அழைத்து பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பது, ஊர்வலங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒருசிலர் சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்று தெருவோரத்தில் விநாயகர் சிலை வைத்து விழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் தெருவோரத்தில் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் உத்தரவிட்டுள்ளன. நான் புதுச்சேரி மக்களையும், இந்துக்களையும் கேட்டுக் கொள்வதெல்லாம் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து பூஜை செய்யுங்கள்.

கோயிலுக்குச் சென்று விநாயகரை தரிசித்துவிட்டு வாருங்கள். ஆனால், பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்துக் கூட்டத்தைக் கூட்டி கொரோனா தொற்றுப் பரவ காரணமாக இருக்கக்கூடாது. இருக்கின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும், புதுச்சேரி மாநில மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைப்பது, ஊர்வலம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்கு மக்கள் அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

Related Stories:

>