×

வேதாரண்யம் அருகே மூதாட்டியிடம் நகை, பணம் பறித்த வழக்கில் சிக்கிய கொள்ளையர்கள் 7 பேரிடம் நகை, பணம் மீட்பு: ஆயுதங்கள் பறிமுதல்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே நாயை விஷம் வைத்து கொன்று, வீட்டின் கூரையை பிரித்து உள்ளே இறங்கி மூதாட்டியிடம் நகை, பணம் கொள்ளை போன வழக்கில் 24 மணி நேரத்தில் போலீசார் 7 பேர் கும்பலை கைது செய்து நகைகள், ரொக்க பணத்தை மீட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் செண்பகராயநல்லூர் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் கல்யாணி(80). இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். கணவர் முருகேசன், பல ஆண்டுகளுக்கு முன் இறந்ததால் மூதாட்டி கல்யாணி தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்யாணி வளர்த்த நாய்க்கு விஷம் வைத்து கொன்றுவிட்டு வீட்டின் கூரையை பிரித்து உள்ளே இறங்கி தூங்கிகொண்டிருந்த மூதாட்டி அணிந்திருந்த ஆறரை பவுன் நகை மற்றும் டிவி, பீரோவிலிருந்த ரூ.7,000த்தை எடுத்துக்கொண்டு தப்பியோடினர். இது குறித்து கல்யாணி கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை எஸ்ஐ துரைராஜ் தலைமையில் போலீசார் கொள்ளையர்களை தேடி தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் வேதாரண்யம் அருகே தென்னம்புலத்தை சேர்ந்த மகேந்திரன்(44), அவரது மகன்கள் அரவிந்தன்(20), மகேஷ்(17) மற்றும் சிவக்குமார் (20), கத்தரிப்புலத்தைச் சேர்ந்த ஆகாஷ்(19), கரியாப்பட்டினத்தை சேர்ந்த விஜயகுமார்(22), குரவப்புலத்தைச் சேர்ந்த நமச்சிவாயம்(20) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் மூதாட்டியிடம் நகை பறித்ததும், தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 4 பைக், மூன்றரை பவுன் நகைகள், ரூ.7,000 ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர்.

மேலும் இந்த கும்பல் ெசண்பகராயநல்லூரில் பழைய இரும்பு கடை வைத்திருக்கும் குமார் என்பவரை மிரட்டி ரூ.3,500ஐ பறித்ததும், கடந்த ஜூன் 21ல் வாய்மேடு மின்வாரிய ஊழியர் கனகா என்பவரிடம் 5 பவுன் தாலி, ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.

இந்த கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்து நகை, பணத்தை மீட்ட இன்ஸ்பெக்டர்கள் முனியாண்டி, சந்தானமேரி, தனிப்படை எஸ்ஐ துரைராஜ் மற்றும் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : robbers ,jewelery ,Vedaranyam ,Vedaranyam Jewelery , Seizure of Vedaranyam, grandmother, jewelery, money, robbers, weapons
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்