×

மயிலாடுதுறை அருகே பழவாற்றை தடுத்து, புதிய கரை அமைத்து தூர்வாரிய அதிகாரிகள்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தியை ஒட்டி பழவாறு ஓடுகிறது. இப்பகுதியில் இந்த ஆறு வடிகாலாகும். சீர்காழி தாலுகா தேனூர் மதகில் இந்தப்பழவாறு அடைக்கப்பட்டு அங்கிருந்து சீர்காழி கொள்ளிடம் பகுதிகளுக்கு பாசன ஆறாக செல்கிறது. பட்டவர்த்தி பாலத்திற்கு முன்பாக களமேட்டுத்திடல் என்ற இடத்தின் திருப்பத்தில் பழவாற்றின் போக்கு மாறி வடபுற கரையோரத்தில் உள்ள வயல் பகுதிகளை 20 அடி அகலத்திற்கு 200 மீ. தூரம் வரை கரைத்துவிட்டது. இதுபோல் வயலைக் கரைத்துசெல்வது வாடிக்கையாகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரும்போது இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறியதற்கு அலட்சியமாக இருந்துவிட்டனர்.

தற்போது தூர்வாருவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்தபோது, ஆற்றின் வட எல்லையில் பழவாற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை விட்டுவிட்டு கரையை அமைத்து அதன்பிறகு தூர்வார அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் எந்த கோரிக்கையையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தூர்வாரும் கான்ட்ராக்டர்களோ மேடாகிப்போன ஆற்றின் தென்புறத்தில் 10ஆயிரம் சதுர அடியை அப்படியே விட்டுவிட்டனர். ஆற்றின் தென்பகுதியில் புதிதாக கரையை அமைத்த அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வட எல்லைக்கு கரை அமைக்காமல் சென்றுவிட்டனர்.

ஏற்கனவே பள்ளமாக உள்ள இப்பகுதியில் புல்பூண்டுகளை அகற்றிவிட்டு புதிதாக கரையை அமைத்துவிட்டு சென்றுள்ளனர். ஆற்றின் நடுவே 10 ஆயிரம் சதுர அடி அனாமத்தமாக கிடக்கிறது. ஆறு ஆக்கிரமிக்க ஏதுவாகும். உடனடியாக கலெக்டர் இந்த அத்துமீறலை பார்வையிட்டு பொதுப்பணித்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலத்தை திரும்ப பெற்றும் விடுபட்ட ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக் கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags : Mayiladuthurai , Mayiladuthurai, Fruit, Sirkazhi, Kollidam
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...