×

எஸ்சி, எஸ்டி பிரிவினரை போலவே இதர பிரிவு சிறுகுறு விவசாயிகளும் மருத்துவ செடிகளை வளர்க்கலாம்: 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு மாற்றம்

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செய்யும் பணிகளின்  பட்டியலில், மூலிகை செடிகள் வளர்ப்பதையும் ஆயுஷ் அமைச்சகம் சேர்த்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கிராமப்புற ஏழை மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. இதனால், இதை 100 வேலை திட்டம் என்றும் சுருக்கமாக அழைப்பார்கள். இதில், ஏரி, குளங்களை தூர்வாருவது, சாலைகள் அமைப்பது உட்பட பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன. இத்திட்டத்தில் சமீபத்தில், கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்தை இழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகமும், ஆயுஷ் அமைச்சகமும் புதிய மாற்றங்களை செய்துள்ளன. இது தொடர்பாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு  இத்துறைகள் சார்பில் பல்வேறு வழிகாட்டுதல்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்  அமைச்சகமானது மருத்துவ செடிகள் வளர்ப்புக்காக ரூ.4,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்துகிறது. இதன் மூலமாக, அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் ஹெக்டேர்  பரப்பளவில் மருத்துவ செடிகளை வளர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், இதன் சாகுபடி  செலவில் 50 சதவீதம் மானியமாகவும் வழங்கப்பட உள்ளது.   

ஆயுஷ் அமைச்சகம் மற்றும்  தேசிய மூலிகை தாவர வாரியமானது 142 வகையான மூலிகை செடிகளை அடையாளம்  கண்டுள்ளது. இந்த மூலிகை செடிகளானது அசோகா பண்ணை, இமாலயன் பண்ணை, பிரிஹாத்  பஞ்சமுலா பண்ணை, குக்குலு பண்ணை, வான் அவுசாதி பண்ணை ஆகியவற்றில்  வளர்க்கப்படும். ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளான அனுமதிக்கப்பட்ட பண்ணை  தோட்டங்களை விட தற்போது குறிப்பிட்ட வழிகாட்டுதலின் கீழ் அனுமதிக்கப்பட்ட  பட்டியலில் ஆயுஷ் அமைச்சகம் மருத்துவ செடிகள் பண்ணையை சேர்த்துள்ளது. இதன்  மூலம், கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு  விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் மருத்துவ தாவரங்களை பயிரிடலாம்.

தற்போது  வரை தனிப்பட்ட நிலங்களை இந்த திட்டத்தின் கீழ் எஸ்சி, எஸ்டி பிரிவினர்  மட்டுமே பயன்படுத்த முடியும். ஆயுஷ் திட்டத்தின் மூலம் அனைத்து சமூகத்தை  சேர்ந்த குழுக்களும் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் தேசிய ஊரக வேலை உறுதி  திட்டத்தின் கீழ் மருத்துவ செடிகளை பயிரிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொல்லையிலும் வேளாண் ஏற்றுமதி 23 சதவீதம் உயர்வு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த  மார்ச் 23ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கினார்கள். அரசு அலுவலகங்கள்,  தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன. ரயில், விமானம், பேருந்து என  பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதுபோன்ற சிக்கலான கால  கட்டத்திலும், நாட்டில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த ஆண்டுடன்  ஒப்பிடும்போது இந்தாண்டு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக வேளாண் துறை  அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘மார்ச் முதல் ஜூன்  வரையிலான கால கட்டத்தில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த கால கட்டத்தில் 25,552 கோடிக்கு ஏற்றுமதி  செய்யப்பட்டுள்ளது. இதுவே, கடந்தாண்டு இதே கால கட்டத்தில் ஏற்றுமதி 20,734  கோடியாக இருந்தது. குறிப்பாக கோதுமை, நிலக்கடலை, கொண்டை கடலை போன்வற்றின்  ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2019-2020ம் ஆண்டில்  வேளாண் மற்றும் அது தொடர்பான பொருட்கள் 2.52 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி  செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 1.47 லட்சம் கோடிக்கு இறக்குமதி  செய்யப்பட்டுள்ளது.


Tags : SC and ST ,plants ,Central Government , SC, ST section, small farmers, medicinal plants, 100 day work program, Central Government
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...