×

காரைக்குடியில்தான் இந்த அதிசயம் மாணவர் சேர்க்கை நடப்பாண்டிலும் ‘ஹவுஸ்புல்’ 500 மாணவருக்கு இடமில்லையென திருப்பி அனுப்பியது அரசு பள்ளி(!?!)

காரைக்குடி : காரைக்குடி அரசு பள்ளி ஒன்றில், சேர்க்கை முடிந்த நிலையில், இடமில்லை என 500 மாணவர்களை அனுப்பி வைத்த சம்பவம் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அரசு பள்ளிகளில் நேற்று முன்தினம் முதல் மாணவர் சேர்க்கையை துவக்க அரசு அனுமதி அளித்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி டி.டி.நகர் பகுதியில் ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 6ம் வகுப்பில் 200 மாணவர்கள் மட்டுமே சேர்க்க முடியும் என்ற நிலையில், முதல் நாளே 700 பேர் காலை 6 மணி முதல் காத்திருந்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்.

கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால் 200 மாணவர்களை மட்டும் சேர்த்து விட்டு, 500 பேரை இடம் இல்லை என திருப்பி அனுப்பி உள்ளனர். மேலும், பள்ளியின் வெளியே, ‘6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை முடிந்தது. சேர்க்கைக்கான இடம் இல்லை’ என போர்டும் வைத்துள்ளனர். அரசு பள்ளியில் முதல் முறையாக அட்மிஷன் முடிந்தது என போர்டு வைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமையாசிரியர் பீட்டர்ராஜா கூறுகையில், ‘‘எங்கள் பள்ளியில் 1,325 மாணவர்கள் படிக்கின்றனர். 10ம் வகுப்பில் 169 பேர் படித்து வெளியேறி உள்ளனர். காலியாக உள்ள 4 வகுப்பறைகளுக்கு மட்டுமே மாணவர்களை சேர்க்க முடியும். சேர்க்கை துவங்கிய முதல்நாளே 700 பேருக்கு மேல் வந்து விட்டனர். 200 பேரை மட்டும் சேர்த்து விட்டு 500 பேரை திருப்பி அனுப்பி உள்ளோம்.

தினமும் அட்மிஷன் கேட்டு பெற்றோர்கள் வருவதால் போர்டு வைத்துள்ளோம்’’ என்றார். பெற்றோர்கள் கூறுகையில், ‘‘பள்ளியின் சிறந்த செயல்பாடு காரணமாக, மாணவர்களை இங்கு சேர்க்க அதிகளவில் வருகின்றனர். கூடுதலாக மாணவர்களை சேர்க்க காரைக்குடி தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள அரசு இடத்தில் கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Karaikudi ,government school ,Housepool ,enrollment process , karaikudi,Government School ,Admission ,Applications Rejected
× RELATED காரைக்குடியில் டாப் இல்லாத டாய்லெட் கண்டுகொள்ளாத நகராட்சி