திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பல விமான நிலையங்கள் தொடர்ந்து தனியாரிடம் வழங்கப்படும் என்றும் அடுத்த 10 வருடத்தில் புதிதாக 100 விமான நிலையங்கள் நாட்டில் கட்டப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து திருவனந்தபுரம் விமான நிலையம் உள்ளிட்ட 12 விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க இந்திய விமான நிலைய நிர்வாகம் பரிந்துரை செய்தது.

இதையடுத்து, ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொது மற்றும் தனியார் பார்ட்னர்ஷிப் மூலம் அதானி குழுமத்திடம் ஐம்பது வருடங்களுக்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் இதை மறுபரிசீலனை செய்யுமாறும் அதில் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநில அரசு முன்வைத்த வாதங்களுக்கு எந்தவித மதிப்பும் கொடுக்காமல் மத்திய அரசு ஒருதலைபட்சமாக எடுத்துள்ள முடிவைப் பார்க்கும்போது நாங்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பது கடினமாக இருக்கும்.

இது எங்கள் விருப்பத்திற்கு எதிராக எடுத்துள்ள முடிவு. இதனால் இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாநில அரசு முக்கிய பங்குதாரராக உள்ளதால் தனியாரிடம் விமான நிலையத்தை ஒப்படைக்க வேண்டாமென நாங்கள் பலமுறை வைத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேரளா மாநில அரசு கொச்சி மற்றும் கண்ணூரில் உள்ள விமான நிலையங்களை சிறப்பாக நிர்வகித்து, மக்களுக்கு நல்ல விதமான அனுபவங்களை கொடுத்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன், என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>