×

அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்தியர்கள் ஓட்டுக்கு அமோக மவுசு : வாக்குறுதிகளை அள்ளி வீசும் டிரம்ப், பிடென்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இந்துக்களின் வாக்குகளை குறி வைத்து குடியரசு, ஜனநாயக கட்சிகள் மாறி மாறி சலுகைகள் அறிவித்து தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளன.   அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் களமிறங்கி உள்ளார். ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்ட பிறகு, பிரசாரம் மேலும் அனல் பறக்க தொடங்கி உள்ளது.

தனிநபர் தாக்குதல், கட்சி தரப்பு, பிறப்புரிமை என ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்த தேர்தல் பிரசாரம், தற்போது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதமாக உள்ள இந்து சமூகத்தினரின் வாக்கு வங்கியை நோக்கி திரும்பி உள்ளது. குறிப்பாக, கமலா துணை அதிபர் வேட்பாளராக தேர்வான பிறகு, டிரம்ப் தேர்தல் பிரசார குழுவினரின் கவனம் இந்து சமூகத்தினர் மட்டுமின்றி, கிறிஸ்தவர், சீக்கியர் என மத ரீதியிலானதாக உருவெடுத்துள்ளது.
இதற்காக `டிரம்புக்கான இந்துகளின் குரல்’ இந்தியர்களின் குரல், கிறிஸ்தவர்களின் குரல், சீக்கியர்களின் குரல் என்ற சிறப்பு குழுக்களை இணையதளத்தில் தொடங்கி, அதன் மூலம், டிரம்ப் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டால் தங்கள் சமூக, இன மக்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை குறிப்பிட்டு வாக்கு சேகரிக்கும் முயற்சியில் டிரம்ப் பிரசார குழு ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே, ஒட்டு மொத்த இந்தியர்களின் ஓட்டுகளை கவரும் வகையில், எச்1பி விசாவில் தளர்வு, எல்லை, உள்நாட்டு பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவு என, 13 லட்சம் இந்தியர்களின் வாக்குகளை கவரும் வகையில் டிரம்பும், பிடெனும் மாறி மாறி சலுகைகளை அறிவித்து காய் நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில், அதிபர் டிரம்ப் தனது நேற்றைய பிரசாரத்தில், மீண்டும் தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், அமெரிக்காவில் இந்துகளுக்கு இருக்கும் மத சுதந்திரத்தின் மீதான தடைகள் நீக்கப்படும் என்று வாக்களித்துள்ளார். அதே போல்,  தான் அதிபராக தேர்வானால் இந்து சமூகத்தினருக்கு முன்னுரிமை அளிப்பதாக பிடென் கூறியுள்ளார்.

கமலா ஹாரிசுக்கு இந்திய வம்சாவளி (தாய் வழி), ஆப்ரிக்க வம்சாவளி (தந்தை வழி), யூத வம்சாவளி (கணவர் வழி) என கலப்பின பின்னணியின் ஆதரவு பெருகி வருகிறது. இது தவிர இந்துக்கள், தெற்காசிய நாட்டவர்கள் என மதம், நாடு கடந்து கண்டங்களின் அடிப்படையிலும் மக்கள் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தவிர, ஜனநாயக கட்சியின் முன்னாள் அதிபர்கள் ஒபாமா, கிளிண்டன் உள்ளிட்டோரும் பிடெனுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளனர். இதனால், டிரம்ப்புக்கு போட்டி கடுமையாகி இருக்கிறது.

குறித்த நேரத்தில் வாக்கு பெட்டி

கொரோனா பீதி காரணமாக, அமெரிக்காவில் இம்முறை தபால் மூலம் வாக்குப்பதிவு நடக்கிறது. தபால்துறையின் செயல்பாடுகள் மீது மக்கள் ஏற்கனவே அதிருப்தியில் இருப்பதால், வாக்கு பெட்டிகள் குறித்த நேரத்தில் கொண்டு சேர்க்கப்படுமா? என்ற சந்தேகத்தை கிளப்பினர். இந்நிலையில், தபால்துறை தலைவராக பொறுப்பேற்றுள்ள லூயிஸ் டிஜோய் கூறுகையில், ``தபால்துறையின் சில நடவடிக்கை, செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதன் மூலம் வாக்கு பெட்டிகளை குறித்த நேரத்தில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,’’ என்றார்.

அதிகாரப்பூர்வமாக தேர்வு

அமெரிக்காவில் நேற்று நடந்த ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில், அமெரிக்க அதிபர் தேர்தல் 2020ல், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பிடென் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டார்.

கிளிண்டன் சும்மா கிழி

தேசிய மாநாட்டில் பேசிய முன்னாள் அதிபர் கிளிண்டன், ``டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த 4 ஆண்டுகளும், டிவி பார்த்து கொண்டு, சமூக வலைதளங்களில் இருந்து தனக்கு பிடிக்காதவர்களை நீக்குவதை மட்டுமே செய்து கொண்டிருப்பார். மேலும், மற்றவர்கள் மீது குற்றம் சாட்டியும், இழிவுபடுத்தி கொண்டும் இருப்பார்,’’ என்றார்.

Tags : Amoka Mausu ,Joe Biden ,Indians ,US ,Democrats , Donald Trump,Joe Biden, America Election, white house
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை