×

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் முதல் முறையாக பைனலில் பிஎஸ்ஜி

லிஸ்பன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்பி லெய்ப்ஜிக் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் ஜெர்மனியின் ஆர்பிஎல் - பிஎஸ்ஜி (பிரான்ஸ்) அணிகள் மோதின. இந்த 2 அணிகளும் இதுவரை யுஇஎப்ஏ தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில்லை. அதனால் ‘முதல்முறை பைனல்’ கனவில்  விளையாடின. ஆர்பிஎல் அணியில் காலிறுதியில் விளையாடிய ஒரு வீரரைத் தவிர மற்றவர்கள் அரையிறுதியிலும் விளையாடினர்.

பிஎஸ்ஜி அணியில் 4 மாற்றம் இருந்தது. முக்கியமாக, காயம் காரணமாக கோல்கீப்பர் கெய்லோர் நாவாசுக்கு பதிலாக செர்ஜியோ ரிகோ களம் கண்டார். பரபரப்பான முதல் பாதி ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியின் மர்கியூனோஸ் 13வது நிமிடத்திலும், ஏஞ்சல் டீ மரியா 42வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இடைவேளையின்போது பிஎஸ்ஜி 2-0 என முன்னிலை வகித்தது. எனவே 2வது பாதி ஆட்டத்தில் ஆர்பிஎல் கூடுதல் வேகம் காட்டியது. ஆர்பிஎல் பயிற்சியாளர் ஜூலியான்  நகெல்ஸ்மன், அடுத்தடுத்து மாற்று ஆட்டக்காரர்களை அனுப்பிய வண்ணம் இருந்தார். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. இரண்டாவது பாதியிலும் பிஎஸ்ஜிதான் கோல் அடித்தது. அந்த அணியின் ஜுவன் பெர்னாட் ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் கோல் போட்டார்.

அதன் பிறகு 2 அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆர்பிஎல் வீரர்கள் காட்டிய வேகத்துக்கு 3மஞ்சள் அட்டைகள்தான் கிடைத்தன. ஆட்ட நேர முடிவில் பிஎஸ்ஜி 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்பிஎல் அணியை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் 2வது அரையிறுதியில் பிரான்சின் ஒலிம்பிக்யூ லியோன், ஜெர்மனியின் பேயர்ன் மியூனிக் அணிகள் விளையாட உள்ளன. அதில் வெற்றிப் பெறும் அணி ஆக.24ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பிஎஸ்ஜி அணியுடன் மோதும்.

Tags : final ,PSG ,European Champions League , PSG in the final of the European Champions League, for the first time
× RELATED மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை