×

ஸ்டெர்லைட் ஆலை மூடிய விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு கேவியட் மனுவை நேற்று தாக்கல் செய்தது. இதேபோல ஆலை எதிர்ப்பாளர்கள் அமைப்பு சார்பாகவும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018ம் ஆண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்திய நூறாவது நாளான மே.22ம் தேதியன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு அதற்கு சீல் வைத்தது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம் முதலாவதாக தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆதரவாக உத்தரவு பிறப்பித்தாலும், இதையடுத்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை நிராகரித்து. மேலும் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நேற்று முன்தினம் ஒரு அதிரடி தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அதில்,” வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஸ்டெர்லைட் முடுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணை என்பது செல்லும் எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் மக்கள் அதிகாரம் உட்பட ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் அமைப்பை சார்ந்தவர்கள் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மூலம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த ஒரு புதிய உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : plant ,closure ,Tamil Nadu ,Supreme Court ,Sterlite ,government , Sterlite plant, closed case, Supreme Court, Government of Tamil Nadu, caveat petition
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...