×

சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் சென்னை மாநகரின் நெரிசலில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள்: போக்குவரத்து போலீசார் எங்கே ?

சென்னை: முக்கிய சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மாநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசாரும் சாலைகளில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபடாததால் பல மணி நேரம் நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கொரோனா தடுப்பு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் சென்னை மாநகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. முதன்மை சாலைகளான அண்ணாசாலை, வடபழனி நூறடி சாலை, ஜிஎஸ்டி சாலை, ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, போரூர் நெடுஞ்சாலை என அனைத்து சாலைகளும் மூடப்பட்டது.

மேலும், முதன்மை சாலைகளை இணைக்கும் பேருந்து வழிச்சாலைகள், சிறிய சாலைகள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்களும் தடுப்புகள் அமைத்து மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் அடைத்தனர். இதனால் பொதுமக்கள் தங்களது பைக், ஆட்டோ, கார், மினி வேன் என அனைத்து வாகனங்களையும் முதன்மை சாலைகளின் சர்வீஸ் சாலைகள், இணைப்பு சாலைகள், பேருந்து வழிச்சாலைகள் என சாலையோரங்களில் நிறுத்தி வைத்தனர். போலீசாரும் வாகனங்களை நிறுத்த அனுமதித்தனர்.

குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என நான்கு மாதங்கள் போக்குவரத்து இன்றி நிறுத்தப்பட்டது. அதேநேரம், சில தளர்வுகளுடன் ஜூலை மாதம் இறுதி மற்றும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பொது போக்குவரத்து தவிர்த்து அனைத்து வாகனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.  கடந்த ஜூலை மாதம் முதல் தனியார் அலுவலகங்கள் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் பணியாட்களுடன் இயங்க அரசு அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து  இ-பாஸ்கள் இன்றி தனியார் வாகனங்கள் செல்ல மாநகர போக்குவரத்து போலீசார் அனுமதி வழங்கினார். முதன்மை சாலைகளில் அமைக்கப்பட்ட 400 போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

7ம் கட்டமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்டுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல தற்போதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் சென்னை மாநகரம் கொரோனாவுக்கு முந்திய வழக்கமான நாட்களை போன்று தற்போதும், அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் நெரிசலுடன் காணப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக இயங்க ஆரம்பித்து விட்டன. குறிப்பாக கடைகள் முன்பு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடைகளுக்கு வருகிறவர்கள் நடுரோட்டில் கார்களை நிறுத்தி இறங்கிச் செல்கின்றனர்.

அவர்களில் பலர் சாலைகளில் கார்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. மேலும், பல்வேறு தளர்வுகளால் காலை நேரங்களில் கொரோனா காலத்துக்கு முன்பு இருந்ததுபோல பழையபடி வழக்கமான போக்குவரத்து உள்ளது. காலையில் அதிக வாகன நெரிசலும் ஏற்படுகிறது. அதிக வாகன நெரிசலுக்கு போக்குவரத்து போலீசாரின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளன. ஆனால், சென்னையில் முதல்வர் செல்லும் பாதை, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் செல்லும் பாதைகளில் மட்டுமே போக்குவரத்து போலீசாரை சிக்னல்களில் பார்க்க முடிகிறது. மற்ற முதன்மை சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள், கிழக்கு கடற்கரை சாலைகள், ராஜீவ்காந்தி சாலை என முக்கிய சாலைகளில் கூட போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாத நிலை உள்ளது.

மாநகர போக்குவரத்து காவல் துறையில் 3500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கடந்த 1ம் தேதி முதல் மாநகரில் உள்ள 400 முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து போலீசாரின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், போக்குவரத்து போலீசார் சாலைகளில் நிற்பது மட்டுமின்றி, சாலைகளில் குறிப்பாக முக்கிய சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால்தான் என்று தெரியவந்துள்ளது. முக்கியமான சாலைகளின் சர்வீஸ் சாலைகள், பேருந்து வழிச்சாலை என பல இடங்களில் கொரோனா ஊரடங்கால் நிறுத்த போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் தற்போதும் அதை இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் இணைப்பு சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் செல்ல முடியாதபடி கார்கள் மற்றும் மினி வேன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல பல்லாவரம், வேளச்சேரி, தரமணி, அடையார், மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலை, கீழ்ப்பாக்கம், சூளைமேடு, அண்ணாநகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, சாலிகிராமம், வளசரவாக்கம், தண்டையார் பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை, பெரம்பூர் நெடுங்சாலை, ராஜீவ் காந்தி இணைப்பு சாலைகள் என அனைத்து சாலையோரங்களிலும் வரிசையாக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது அனைத்து கடைகள் மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதனால் கொரோனா காரணமாக சொந்த மாவட்டங்களுக்கு சென்று இருந்த மக்கள்அனைவரும் சென்னை திரும்பி உள்ளனர். மேலும், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்ற அரசு அறிவித்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் தங்களது கார் மற்றும் பைக்குகளில் வந்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் சாலையோரம் கடந்த 4 மாதங்களுக்கு மேல் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அகற்றப்படாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் முழுமையாக பணியில் ஈடுபடாததால் சாலையோரம் லட்சக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்துக்கு தடையாக நிறுத்தப்பட்டுள்ளது. அப்படியே பணியில் இருக்கும் போக்குவரத்து போலீசார் கொரோனா அச்சத்தால் தங்களது வாகனங்கள் மற்றும் சாலையோரம் மரத்தடி நிழலில் தங்களது செல்போனையே பார்த்து கொண்டு இருக்கின்றனர். இதனால், சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனகளை அகற்ற வேண்டும். சாலைகளில் வழக்கம்போல போக்குவரத்து போலீசார் பணியாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா ஊரடங்கை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் முழுமையாக பணியில் ஈடுபடாததால் சாலையோரம் லட்சக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்துக்கு தடையாக
நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Motorists ,Chennai , Where are the road, vehicle, Chennai city, traffic jams, motorists, traffic police?
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...