×

மதுரவாயல் பூக்கடைகளுக்கு சீல்: வியாபாரிகள் வாக்குவாதம்

பூந்தமல்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை கடந்த ஏபரல் மாதம் மூடப்பட்டது. இதனையடுத்து காய்கறி சந்தை திருமழிசைக்கும், பழசந்தை மாதவரத்திற்கும் மாற்றப்பட்டது. ஆனால் பூ சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கப்படாததால் மாதவரம், கோயம்பேடு, மதுரவாயல், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் தனியார் இடங்களில் வாடகை கொடுத்து பூ வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் பூ வியாபாரம் செய்ய  வானகரத்தில் உள்ள சிவன் கோவில் நிலத்தில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மதுரவாயலில் தனியார் இடத்தில் செயல்படும் பூக்கடைகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதாகவும், இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறி கடையை சீல் வைப்பதற்காக சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டல அதிகாரிகள் பூக்கடை வளாகத்திற்கு வந்தனர். இதற்கு பூ வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வியாபாரிகளுக்கு அதிகாரிகளுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. நீண்டநேர போராட்டத்திற்கு பின்பு காவல்துறையினர் உதவியுடன் பூக்கடை வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூ சந்தையில் வாடகை அதிகம் கேட்கின்றனர். அதேபோல அங்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. தற்போது மதுரவாயலில் தாங்கள்  பூக்கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். அரசு அறிவித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நெறிமுறைகளின்படி இங்கு செயல்பட்டு வருகிறோம். ஆனால் வானகரத்தில் அமைக்கப்பட்டு வரும் பூ மார்க்கெட்டுக்கு எங்களை  மாற்றுவதற்காக அதிகாரிகள் திட்டமிட்டு இங்குள்ள கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர் இவ்வாறு அவர்கள் குற்றம் சாட்டினர்.


Tags : florist ,Madurai ,Merchants , Maduravayal, seal for florists, merchants, controversy
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...