சென்னை-சேலம் 8 வழிச்சாலை, மாநில வளர்ச்சி தொடர்பான திட்டம் என்பதால் உச்சநீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் : மத்திய அரசு

டெல்லி : சென்னை-சேலம் 8 வழிச்சாலை, மாநில வளர்ச்சி தொடர்பான திட்டம் என்பதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டுள்ளது. சென்னை-சேலம் இடையில் உருவாக்க திட்டமிடப்பட்டு இருக்கும் எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், அதுதொடர்பான அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை ரத்து செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அருண்மிஸ்ரா, பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிதிபதி அருண்மிஸ்ரா தெரிவித்தார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நெடுஞ்சாலைத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, மாநில வளர்ச்சி தொடர்பான திட்டம் என்பதால் இதனை விரைந்து விசாரிக்க வேண்டும். தள்ளிவைக்கக் கூடாது என நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி அருண்மிஸ்ரா, இங்கு அனைத்து வழக்குகளுமே முக்கியம் வாய்தது தான் எனக்கூறி மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு செப்டம்பர் 3ம் தேதிக்கு விசாரணைக்கு வரும் என தெரியவருகிறது.

Related Stories:

>