×

இலங்கை கடற்படை அட்டகாசம் ஆரம்பம்; ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: மீன்பாடு இல்லாமல் கரை திரும்பியதால் நஷ்டம்

ராமேஸ்வரம்: மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் மீண்டும் விரட்டியடித்தனர். மீன்பாடு இல்லாமல் கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை வழிமறித்து விரட்டியடித்தனர். இதனால் அங்கிருந்து திரும்பிய மீனவர்கள், கரையோரப்பகுதிகளில் இரவு முழுவதும் மீன்பிடித்து நேற்று காலை கரை திரும்பினர். கரை திரும்பிய படகுகளில் இறால் மீன்வரத்து குறைவாக இருந்தது. சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்கள் அதிகளவில் பிடிபட்டிருந்தது.

பெருமளவில் சங்காயம் மீன்கள் கிடைத்தும் நல்ல விலைக்கு விற்பனையாகாததால், ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இலங்கையில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றதால் கடல் பகுதியில், இலங்கை கடற்படையினர் ரோந்துப்பணியில் தீவிரம் காட்டவில்லை. இதனால் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது தேர்தல் முடிந்து அமைச்சரவை பதவியேற்பும் முடிந்த நிலையில், பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறல் நடவடிக்கையை இலங்கை கடற்படையினர் மீண்டும் துவங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags : fishermen ,Loss ,Commencement ,Rameswaram ,Sri Lanka Navy , Sri Lanka Navy, Rameswaram, Fishermen
× RELATED தொடரும் இலங்கை கடற்படையின்...