×

அமெரிக்க அதிபர் தேர்தல்...: ஜோ பிடென்-ஐ அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஜனநாயக கட்சி!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜோ பிடென் அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடென் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக போட்டியிட ஜோ பிடெனை, ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோ பிடென், அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை, என்று கூறியுள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு, ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்சேல் ஒபாமா, டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு மிகத் தவறான அதிபர் என்றார். தலைமை பண்பு, நிலையான போக்குகள் அற்றவர் என்றும், குழப்பங்களை விளைப்பவர் என்றும் சாடியுள்ளார்.


Tags : candidate ,Joe Biden ,election ,US ,Democrats , United States, Presidential Election, Joe Biden, Candidate, Democrat
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை