×

பிடிஓ அலுவலக மேலாளர் கொரோனாவுக்கு பலி

ஸ்ரீபெரும்புதூர்: கொரோனா தொற்றுக்கு, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர், சிகிச்சை பலனின்றி இறந்தார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில், கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனாலும், கொரோனா தொற்று அசுர வேகத்தில் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர், மேலாளர் மற்றும் உதவியாளர் உள்பட 4 பேருக்கு கடந்த மாதம் கொரோனா நோய்தொற்று உறுதியானது.

இதில், மேலாளர் ரவிக்குமார் (50), போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலாளர் ரவிக்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், ‘’ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊரக வளர்ச்சி துறையினருக்கு அதிக பங்கு உள்ளது. ஒருசில ஊழியர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், வேலைப்பளு காரணமாக பணிக்கு வந்து செல்கின்றனர். மற்ற துறையினருக்கு கொரோனா உறுதி செய்யபட்டால், அந்த அலுவலகம் மூடப்படுகிறது. ஆனால், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இன்று (நேற்று) ஒருநாள் ஸ்ரீபெரும்புதூர் பிடிஓ அலுவலக ஊழியர்கள் விடுப்பு எடுத்து எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம்’’’’ என்றனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமார் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன்,  சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், ஊராட்சி செயலர் அரிகோவிந்தன் ஆகியோர் வரவேற்றனர். மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தீபலட்சுமி தலைமையில் மருத்துவ குழுவினர் முகாமை நடத்தினர். முகாமில், பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேன், சளி ஆகிய பரிசோதனை செய்யப்பட்டன.

முடிவில், சாதாரண காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தவர்களுக்கு மருந்து மாத்திரைகள், கபசுர குடிநீர், முக கவசம், சானிடைசர் ஆகியவை வழங்கப்பட்டன. திருப்போரூர்: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகள் மற்றும் திருப்போரூர் பேரூராட்சி ஆகியவற்றில் இதுவரை மொத்தம் 1258 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதி 29 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

Tags : office manager ,BDO ,Corona , BDO Office Manager, Corona Kills
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...