சொப்னாவுடன் 3 முறை டூர் வெளிநாடுகளில் தங்கி சதி திட்டம் தீட்டினார்களா? சிவசங்கரிடம் மீண்டும் விசாரிக்க என்ஐஏ முடிவு

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் கைதான சொப்னா, ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருடன் 3 முறை ஒன்றாக வெளிநாடு டூர் சென்று வந்தது விசாரணையில் தெரிய வந்த நிலையில் இருவரும் வெளிநாடுகளில் தங்கி ஏதாவது சதி திட்டம் தீட்டினரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையில் சொப்னாவுடன், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு இருந்த நெருக்கம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. சொப்னா, சந்தீப்நாயர், சரித்குமார் ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் வரை மத்திய அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரித்தது.  

10 நாள் தொடர் விசாரணையில் அமலாக்கத்துறைக்கு சொப்னா கும்பல் தங்கம் கடத்தலில் மட்டுமல்லாது, சட்டத்துக்கு புறம்பான வேறுபல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான விபரங்களும் கிடைத்துள்ளனவாம். இதேபோல் சொப்னாவும், சிவசங்கரும் ஒன்றாக 3 முறை துபாய், ஓமன் சென்று வந்துள்ளனர். இதை விசாரணை அமைப்புகளிடம் 2 பேரும் ஒத்து கொண்டுள்ளனராம். இவர்கள் எதற்காக வெளிநாடு சென்றார்கள்? அங்கு  யார்? யாரை சந்தித்தார்கள்? அப்போது சதித்திட்டங்கள்நடந்ததா ? என்பது குறித்தும் விசாரிக்க என்ஐஏ தீர்மானித்து உள்ளது. இதையடுத்து கூடுதல் தகவல்களை பெற சிவசங்கரிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறையும், என்ஐஏயும் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி  உள்ளன.

தூதரக பார்சலில் தங்கம் கடத்துவற்கான சதித்திட்டம் துபாயில் வைத்து  2019 ஆகஸ்டில் தீட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்பே 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கேட்டு கொண்டதன் பேரில் அவரது ஆடிட்டர்  வேணுகோபால் சொப்னாவுக்கு வங்கியில் லாக்கரை திறக்க உதவியுள்ளார். இந்த லாக்கர் ஆடிட்டர் மற்றும் சொப்னா பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. தங்கம் கடத்தலுக்கான சதித்திட்டம் தீட்டப்படுவதற்கு முன்பே லாக்கர் எடுக்கப்பட்டுள்ளதால், தங்கம் கடத்தல் மட்டுமல்லாது வேறு ஏதாவது சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் மூலம் கிடைத்த பணத்தை, சொப்னாவும், சிவசங்கரும் பங்கு போட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து  வருகிறது. இதற்கிடையே சொப்னாவும், சரித்குமாரும் அமீரக தூதரக அதிகாரிகளுடன் பலமுறை துபாய் சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த பயணம் விசாரணை அமைப்புகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* அமைச்சர் ஜலீலுக்கு சிக்கல்

தங்கம் கடத்தல் விசாரணையின்போது, அமீரக தூதரகத்தில் இருந்து 2 வாகனங்களில் ஏராளமான பார்சல்கள் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலின் கட்டுப்பாட்டில் உள்ள திருவனந்தபுரம் அச்சகம் மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதற்கு விளக்கமளித்த ஜலீல், பார்சலில் துபாயில் இருந்து குரான்கள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கேரள புரோட்டோக்கால் தலைமை அதிகாரி சுனில், சுங்க இலாகாவுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கடந்த 2 ஆண்டுகளாக இது தொடர்பாக எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அனுமதியில்லாமல் அமைச்சர் ஜலீல் குரான்களை இறக்குமதி செய்தது தெரியவந்துள்ளது. இது அவருக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் ஜலீலிடம் சுங்க இலாகா விரைவில் விசாரணை நடத்த உள்ளது.

* சொப்னாவுக்கு நெஞ்சுவலி

சொப்னா, சந்தீப் நாயர், சரித்குமாரை காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை நேற்று முன்தினம் எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தியது. மூவரையும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க  நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே தனக்கு நெஞ்சு வலிப்பதாக சொப்னா கூறினார். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க நீதிபதி உத்தரவிட்டார். அங்கு சிகிச்சை அளித்த பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>