×

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.லட்சுமணன் திமுகவில் இணைந்தார்: 14 மாவட்ட பொறுப்பாளர்களும் சேர்ந்தனர்

சென்னை: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான ஆர்.லட்சுமணன் நேற்று திமுகவில் இணைந்தார். அவருடன் 14 மாவட்ட பொறுப்பாளர்களும் திமுகவில் இணைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர்-விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளரும், மாவட்ட மருத்துவ அணி முன்னாள் செயலாளருமான டாக்டர் ஆர்.லட்சுமணன் திமுவில் இணைந்தார்.

அவருடன் அதிமுகவைச் சேர்ந்த கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆர்.குப்புசாமி, வானூர் தொகுதி செயலாளர் வி.எம்.ஆர்.சிவா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ராம.சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.மணவாளன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.என்.முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் எம்.என்.ஏழுமலை, கோலியனூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் என்.ஆர்.மணி, வழக்கறிஞர் ராம்.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி மைலம் எஸ்.வெங்கடேசன், காணை ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் பொன்.குமார், வானூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் டி.கே.குமார் (எ) லட்சுமணசாமி ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதம் சிகாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திமுகவில் இணைந்த ஆர்.லட்சுமணன் அளித்த பேட்டி:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், ஆலோசனையும்படியும் தீவிரமாக பணியாற்றி, வரும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் அரியணையில் ஏற அயராது பாடுபடுவோம். தமிழக அரசு வலுவான தலைமையின் கீழ் அமைய வேண்டும். எனவே தான் நான் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன். எந்தப் பதவியும் எதிர்ப்பார்த்து நான் வரவில்லை. கொரோனா தொற்று காரணமாக தமிழக மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில் அதிமுகவில் முதல்வர் யார் என்ற போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதிலிருந்தே மக்கள் பிரச்னையை யார் கவனிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அதிமுக ஆட்சி காட்டாற்று ஆட்சி போல ஓடிக் கொண்டிருக்கிறது. அங்கிருந்து தத்தளிக்க விருப்பமில்லை.

அதிமுகவில் இருந்து மேலும் பத்தாயிரம் பேரை திரட்டி இணைப்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். திமுகவில் இணைந்த லட்சுமணன், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து, அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் வழங்கப்பட்டது. சண்முகத்திடம் இருந்த அமைப்புச் செயலாளர் பதவி லட்சுமணனிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகிகள் முழுமையாக லட்சுமணன் கட்டுப்பாட்டில் இருந்தனர். மாவட்டத்தில் செல்வாக்காக விளங்கியவர் லட்சுமணன். அவர் திமுகவில் இணைந்தது, விழுப்புரம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : R. Lakshmanan ,AIADMK ,district officials ,DMK ,MK Stalin ,District Officers , MK Stalin's presence, AIADMK Secretary R. Lakshmanan, DMK joined, 14 District Officers, joined
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...