×

குன்றத்தூரில் சமூக இடைவெளியை மறந்து ‘கறி விருந்து’ தாசில்தார் டிரான்ஸ்பர்

சென்னை: சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரின் கையால் தங்கப்பதக்கம் வாங்கியதைக் கொண்டாடும் வகையில், குன்றத்தூர் தாசில்தார் ஜெயசித்ரா, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கறிவிருந்து கொடுத்தார். இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் நேற்று பிரசுரமானது. கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் வேளையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரியே மாபெரும் கூட்டத்தை கூட்டி, கறிவிருந்து என்ற பெயரில் கும்மாளம் போட்ட சம்பவம் குன்றத்தூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாசில்தாரின் இச்செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அவர் பணியில் இருந்து மாறுதல் செய்யப்பட்டு, நெடுஞ்சாலை துறையில் நிலம் எடுப்புப் பிரிவில் காஞ்சிபுரம் பகுதிக்கு மாறுதல் செய்யப்பட்டார். குன்றத்தூருக்கு புதிதாக திருபெரும்புதூரில் பணியாற்றி வந்த முத்து புதிய தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று வழங்கினார். அதிகாரிகளின் மக்கள் விரோதப்போக்கை உடனுக்குடன் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி, தவறு செய்த அதிகாரி மீது பணி மாறுதல் வழங்கக் காரணமாக இருந்த தினகரன் நாளிதழின் நற்செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags : Kunrathur ,Curry Feast' Dasildar Transfer ,Dasildar Transfer , In Kunrathur, the social gap, the forgotten ‘Curry Feast’, Tashildar Transfer
× RELATED தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்...