×

தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.896 அதிகரிப்பு: நகை வாங்குவோர் மீண்டும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.896 அதிகரித்தது. இது நகை வாங்குவோருக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் தங்கம் விலை மட்டும் கடுமையாக அதிகரித்து வந்தது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதற்கு முந்தைய நாள் (மார்ச் 23ம் தேதி) முதல் கடந்த 7ம் தேதி வரை சவரனுக்கு ரூ.11,712 வரை அதிகரித்தது. 7ம் தேதி சவரன் ரூ.43 ஆயிரத்து 328க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை தங்கம் விலை குறைந்து வந்தது. 8ம் தேதி ஒரு சவரன் ரூ.43,080 ஆகவும் 13ம் தேதி ரூ.40,608 ஆகவும் விற்கப்பட்டது. அதன் பிறகு 17ம் தேதி (நேற்று முன்தினம்) தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.5,075க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.40,600க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒருநாள் கூட நீடிக்கவில்லை. இந்நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நேற்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.112 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,187க்கும், சவரனுக்கு ரூ.896 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,496க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை மீண்டும் அதிகப்படியாக உயர்ந்து இருப்பது நகை வாங்குவோரை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:தங்கம் விலை அபரீதமாக உயர்வை சந்திக்கும் போது, ஒரு “கரெக்ஷன்” வருவது இயல்பு தான். அதாவது, சற்று விலை குறையும். அதன் பின்னர் அதே வேகத்தில் அதிகரிக்கும். இது வாடிக்கையான ஒன்றுதான். தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. அதனால், தங்கம் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ளது. அது வரை தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் நிலைதான் காணப்படும்.

Tags : buyers , Gold prices rise by Rs 896 per ounce in a single day, shocking jewelery buyers again
× RELATED இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120...