×

சென்னையில் 5 மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி குடிமகன்கள் கொண்டாட்டம்

சென்னை: சென்னையில் 5 மாதத்துக்கு பிறகு நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதையடுத்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் குடிமகன்கள் கொண்டாடினர். கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது, சென்னையில் கொரோனா பரவல் நாள் தோறும் உச்ச நிலையை அடைந்து வந்ததால் சென்னை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் 3,700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

இந்தநிலையில், சென்னையில் கடைகளை திறப்பது குறித்து கடந்த மாதம் அரசு ஆலோசனை மேற்கொண்டது. ஆனால், கொரோனா தொற்று குறையாததால் சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முயற்சி கைவிடப்பட்டது. இதையடுத்து, ஆகஸ்ட் 18ம் தேதி முதல் சென்னை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, சென்னையில் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த 720 டாஸ்மாக் கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் திறப்பிற்கு முன்பாக கடைகளின் முன்பு 3 அடி இடைவெளி விட்டு 50 வட்டங்களை ஊழியர்கள் அமைத்திருந்தனர். பிரச்னைகளை தவிர்க்கவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கடைக்கு தலா 4 போலீசர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்த கடைகளில் 2 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. பச்சை மற்றும் ஆரஞ்சு வண்ண டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே மதுபானங்கள் வாங்க குடிமகன்கள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், கடைகளின் முன்பு மரத்தடுப்புகளை அமைத்து அதில் வரிசையாக நிற்க வைத்தே மதுவிற்பனை செய்யப்பட்டது. நேற்று 80 சதவீத கடைகளில் கூட்டம் எதிர்பார்த்ததை விட குறைந்தே காணப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். சில கடைகளில் மட்டும் காலை 8 மணிக்கே மதுவாங்க குடிமகன்கள் குவிந்தனர்.

திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, ராயப்பேட்டை, சேப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவாங்க குடிமகன்கள் நின்றிருந்தனர்.  அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களும், காவல்துறையினரும் ஈடுபட்டனர். இதேபோல், மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு மதுபானங்கள் வழங்கப்படவில்லை. சென்னையில் தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது.

ஞாயிறு மட்டுமே முழு ஊரடங்கு காரணமாக இவை மூடப்படும். எனவே, சென்னையில் நேற்று வழக்கமான நாட்களை போலவே விற்பனை நடைபெற்றதாக ஊழியர்கள் தெரிவித்தனர். வழக்கமாக சென்னை மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நாள் தோறும் ரூ.20 முதல் ரூ.25 கோடிக்கு விற்பனை நடைபெறும். ஆனால், நேற்று 80 சதவீத கடைகளில் கூட்டம் குறைந்திருந்ததால் மதுவிற்பனையும் குறைந்திருந்தது. ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக கண்டிப்பாக சனிக்கிழமையில் கூட்டம் அதிகரிக்கும் என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

* சென்னையில் திறந்ததால் அலைச்சல் மிச்சம்
சென்னையில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. சுமார் ஐந்து மாத இடைவெளிக்கு பின் டாஸ்மாக் திறக்கப்பட்டதை அடுத்து பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. மாஸ்க், சானிடைசர், கை உறை மற்றும் சமூக இடைவெளி போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் வழங்கப்பட்டன. சில கடைகளில் கூட்டம் இருந்தாலும் பல கடைகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து குடிமகன்கள் கூறியதாவது: டேவிட் (சேப்பாக்கம் வாலாஜா ரோடு டாஸ்மாக்): சென்னையில் டாஸ்மாக் திறந்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் கூலி வேலை செய்பவன். வேலை காரணமாக தினமும் மது தேவைப்படும். சென்னையில் டாஸ்மாக் திறக்கவில்லையே தவிர கள்ள சந்தையில் மது கிடைத்தது. அதை ரூ 300 முதல் 400 வரை அதிக விலை கொடுத்து கள்ளசந்தையில் என்னால் வாங்கி குடிக்க முடியவில்லை. வாங்கும் சம்பளம் அனைத்தும் அதற்கே போய்விடும். தற்போது டாஸ்மாக் திறக்கபட்டு விட்டதால் வீட்டு சேமிப்பிற்கு என்னால் பணம் ஒதுக்க முடிகிறது.

அருணாச்சலம் (ராயப்பேட்டை மணிக்கூண்டு டாஸ்மாக்): இதற்கு முன் நீண்ட தூரம் பயணம் சென்று மது வாங்க வேண்டி இருந்தது. ஆனால் தற்போது சென்னையில் கடைகள் திறக்கப்பட்டுவிட்டதால் அலைச்சல் குறைவதோடு பணமும் மிச்சமாகிறது. சென்னையில் டாஸ்மாக் திறக்கப்பட்டது வரவேற்க வேண்டிய விஷயம். செல்வராஜ் (திருவல்லிகேணி டாஸ்மாக்) : டாஸ்மாக் திறக்கப்பட்டது சந்தோசம். ஆனால் ஒருநாளைக்கு 500 டோக்கன்கள் தான் வழங்கப்படும் என்பது நியாயமல்ல. மேலும் மதுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் இல்லை என்பது நிதர்சன உண்மை. எனவே மது விலை குறைப்பில் அரசு ஈடுபட வேண்டும்.

பார்த்தசாரதி (திருவல்லிகேணி டாஸ்மாக்) : மதுக்கடைகள் திறக்கப்பட்டது வரவேற்க வேண்டிய விஷயம் தான். ஆனால் கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 30 முதல் 40 ரூபாய் வரை அதிகம் வாங்குகிறார்கள். ஏன் என்று கேட்டால் பதில் சொல்லாமல், இஷ்டம் இருந்தால் வாங்கு இல்லை என்றால் போ என விரட்டுகின்றனர். டாஸ்மாக் நிர்வாகத்திடம் வெளிப்படை தன்மை இல்லை. இதை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடு மற்றும் விலையேற்றம் பற்றி டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறும்போது : சமூக இடைவெளியை கடைபிடித்து காலையில் 10 மணிக்கு டோக்கன் விநியோகம் தொடங்கப்பட்டது.

சுமார் 11.30 மணி வரையிலும் இருந்த கூட்டம் போகப் போக குறையத்தொடங்கியது. ஊரடங்கால் வருமானம் இன்றி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது. விலையேற்றம் குறித்து குடிமகன்களுக்கு  தெரியவில்லை. அதிக விலையில் கடைகளில் விற்கிறார்கள் என்கின்றனர். ஊரடங்கு போடப்படுவதற்கு 10 நாள் முன்பு ஒருமுறை விலையேற்றப்பட்டது. அடுத்ததாக சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்படும் போது மறுபடியும் விலையேற்றப்பட்டது. இவ்வாறு இரண்டு முறை விலையேற்றப்பட்டும், மதுப்பாட்டில்களில் பழைய விலை மதிப்பு இருப்பதும் தான் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் என்றார்.

* ஊழியர்கள் ஆதங்கம்...
சென்னையில் தற்போது தான் கொரோனா தொற்று சற்று குறைந்து வருகிறது. ஏற்கனவே, கொரோனா பிடியில் இருந்து சென்னை மக்கள் மீளாத நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது. கொரோனா மேல் உள்ள பயத்தின் காரணமாகவும், போதிய வேலைவாய்ப்பு இன்மை காரணமாகவும் நேற்று எதிர்பார்த்த விற்பனை நடைபெறவில்லை என ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 5 மாதத்திற்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டும் நேற்று 80 % கடைகளில் கூட்டம் எதிர்பார்த்ததை விட குறைந்தே காணப்பட்டது. சில கடைகளில் மட்டும் காலை 8 மணிகே குடிமகன்கள் குவிந்தனர்.

Tags : liquor stores ,Chennai ,Tasmag ,Citizens , Chennai, 5 months later, Tasmag liquor stores open, fireworks explode, sweets served, citizens celebrate
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...