×

இறுதி ஆண்டு தேர்வு நடத்தும் விவகாரத்தில் யுஜிசிக்கே உச்சபட்ச அதிகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளைகளை நடத்தும் விவகாரத்தில் யுஜிசி நிர்வாகத்திற்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது என நேற்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட மத்திய அரசு, இதில் மாநில அரசுகள் தலையிட முடியாது என தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களும் பள்ளி பொதுத் தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தன. ஆனால், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்த யுஜிசி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சார்ந்த 31 மாணவர்கள் யு.ஜி.சியின் மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன்,சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் மற்றும் மாநில அரசுகள் தரப்பு வாதத்தில்,” இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தாமல் ஐ.ஐ.டி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியும் என்றால், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஏன் அவ்வாறு செய்ய அனுமதிக்க முடியாது? இதில் ஒவ்வொரு மாநிலங்களின் உள்ளூர் சூழலை கருத்தில் கொள்ளாமல் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்துவதற்கு யுஜிசி எடுத்த முடிவு என்பது, மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளதாக தான் கருதப்படும்.

இதனை ஏற்க முடியாது. மாநிலங்களிடையே கலந்து ஆலோசிக்காமல் கூட செப்டம்பர் 30ம் தேதி இறுதி ஆண்டுக்கான தேர்வு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நடத்தப்படும் என அறிவித்துள்ளது’’ என வாதிடப்பட்டது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதத்தில்,” கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தாமல் இருப்பது என்பது மாணவர்களின் திறன்கள் அனைத்தையும் நீர்த்துப்போக செய்யும். அதனால் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இதில் யாருக்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் மாநிலங்களுக்கு தொடர்புடையதாக நாங்கள் கருதவில்லை. அவர்கள் தலையீடு செய்யவும் முடியாது. இதில் யுஜிசி நிர்வாகத்தின் சட்டம் மற்றும் அவர்களுக்கான உச்சபட்ச அதிகாரங்களை மட்டும் தான் பார்க்க வேண்டியுள்ளது’’ என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘யுஜிசிக்கு முரணாக பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் எப்படி செயல்பட முடியும் என்பது புரியவில்லை? எழுத்துப்பூர்வ அறிக்கையை அடுத்த 3 நாட்களில் அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய வேண்டும்’’ என தெரிவித்து தீர்ப்பை தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இறுதியாண்டு தேர்வு திட்டமிட்டப்படி செப்டம்பர் 30ம் தேதி நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்த தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தாமல் இருப்பது என்பது மாணவர்களின் திறன்அனைத்தையும் நீர்த்துப்போகசெய்யும்.

Tags : examination ,UGC ,Supreme Court , Final year selection, affair, UGC, supreme power, Supreme Court, adjournment of judgment
× RELATED நீட் தேர்வு : மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை