×

தென்மாவட்டங்களில் நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் எதுவும் இல்லை: ஐ.ஜி.முருகன் பேட்டி

தூத்துக்குடி: தென்மாவட்டங்களில் நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் எதுவும் இல்லை என தென்மண்டல ஐ.ஜி.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே குற்றவாளியை பிடிக்க முயன்ற காவலர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவலரை கொன்ற ரவுடியும் தான் வீசிய வெடிகுண்டிலேயே சிக்கி உயிரிழந்துவிட்டார். தூத்துக்குடியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுத்து கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

பின்னர் தலைமறைவான துரைமுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தனது தம்பியை கொலை செய்தவர்களை பலி வாங்க துரைமுத்து திட்டம் தீட்டி வந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரல் அருகே உள்ள மேலமங்கலக்குறிச்சி என்ற இடத்தில் துரைமுத்துவின் தங்கையின் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதும் அதில் துரைமுத்து கலந்து கொண்டதும் தெரிய வந்தது. பின்னர் தனது மாமியாரின் ஊரான வெள்ளூரில் உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருந்ததை அறிந்த தனிப்படை போலீசார், அங்கு சென்றனர்.

போலீஸ் வந்ததை அறிந்த துரைமுத்து அங்கிருந்து தப்பி வல்லநாடு அருகே உள்ள மலைப்பகுதியில் பதுங்கினார். செல்போன் எண்ணை வைத்து காட்டுக்குள் அவன் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் சுற்றிவளைத்தனர். ஆனால் கூட்டாளிகள் 3 பேருடன் தங்கியிருந்த துரைமுத்து போலீசார் நெருங்கி விட்டதை அறிந்து அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தப்பிக்க முயற்சி செய்துள்ளான். இதில் பலத்த காயம் அடைந்த தலைமை காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தநிலையில் போலீசார் மீது வீசிய குண்டு வெடித்ததில் படுகாயம் அடைந்த ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்துவிட்டான்.

தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் ரவுடி பயன்படுத்திய வாகனத்தை ஆயுதங்களுடன் பறிமுதல் செய்தனர். துரைமுத்துவின் கூட்டாளிகள் 3 பேரை பிடித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரவுடி துரைமுத்து பதுங்கி இருந்ததால் அவனுக்கு வனத்துறை அதிகாரிகள் உதவி செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வனத்துறை ஊழியர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். காவலரின் குடும்பத்தில் இருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென்மண்டல ஐ.ஜி.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; உயிரிழந்த ரவுடி துரைமுத்து மீது கொலை வழக்கு உள்பட 10-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. ரவுடி துரைமுத்துவை சுற்றிவளைத்த போது காவலர்களை தாக்கிவிட்டு துரைமுத்து தப்பி ஓடினான். மூவர் பிடிபட்ட நிலையில் தப்பியோடிய துரைமுத்துவை காவலர்கள் துரத்தினர்.

ஓடிக்கொண்டிருக்கும் போது கேரி கவரில் வைத்திருந்த நாட்டுவெடியை துரைமுத்து எடுத்து வீசினார். முதல் குண்டு வெடிக்காத நிலையில் துரைமுத்துவை தாவிப்பிடித்துள்ளார் காவலர் சுப்பிரமணியன். இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டதில் நாட்டு வெடி வெடித்து காவலர் சுப்பிரமணியன் தலை சிதறி உயிரிழந்தார். வெடி விபத்தில் படுகாயமடைந்த ரவுடி துரைமுத்து மருத்துவமனை கொண்டு சென்ற போது உயிரிழந்தார். தென்மாவட்டங்களில் நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் எதுவும் இல்லை எனவும் கூறினார்.


Tags : districts ,IG Murugan , Southern District, Country Bomb Culture, No, IG Murugan
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை