×

பேரையூர் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பு: வீட்டிற்குள் பிணத்தை புதைக்கும் அவலம்

பேரையூர்: மதுரை பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது சாப்டூர். இந்த ஊரில் சதுரகிரி மகாலிங்கம் கோயிலின் பூர்வீக அறங்காவலர்கள் குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கும் மற்றும் சாப்டூர் பொதுமக்களுக்கும் பாத்தியமான சுடுகாடு சாப்டூர் வடகரைப்பட்டியில் உள்ளது.
இந்த சுடுகாட்டை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியும், சுண்ணாம்பு காளவாசல் அமைத்தும் சுற்றுச்சுவர் அமைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வந்த போது ஆக்கிரமிப்பு செய்துள்ள வீட்டிற்குள் பிணத்தை கொண்டு சென்று அடக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு இறந்தவர்கள் குழி மேடுகளை அழித்து வீடாக மாற்றிக்கொண்டதால் தற்போது வீட்டிற்குள் புதைத்துள்ளனர்.

இந்த நிலையில் சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்தவர் இனி வரும் பிணங்களை வீட்டிற்குள் புதைக்ககூடாது என சாப்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் அதிர்ந்து போன சாப்டூர் பொதுமக்கள், சுடுகாட்டை ஆக்கிரமித்து வீடும் கட்டிக்கொண்டு பிணத்தை புதைக்கக்கூடாது எனக்கூறுவதா என உசிலம்பட்டி ஆர்டிஓ ராஜ்குமார், பேரையூர் தாசில்தார் சாந்தி ஆகியோரிடம் புகார் செய்தனர். இதுகுறித்து சாப்டூர் 7வது வார்டு உடையார்(எ)தங்கமுத்து கூறுகையில்,`` எங்கள் ஊர் பொதுமக்களும், பரம்பரை அறங்காவலர்கள் பூசாரிகளுக்காண சுடுகாடு இது. இதன் அருகில் வீடுகட்டி பிழைப்பதற்காக வந்த நபர், இப்போது சுடுகாட்டையே முழுவதும் சுற்றுச்சுவர் அமைத்து வீடு கட்டிகொண்டார்.

இது குறித்து பலமுறை அவரிடம்  நாங்கள் எடுத்து கூறியும் அவர் கேட்கவில்லை. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுடுகாட்டை பொதுமக்களுக்கு மீட்டுத்தர வேண்டும்’’ என்றார்.  இதேபோல் 6வது வார்டு சுந்தரம்மாள் கூறுகையில் எனது பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து பயன்படுத்தி வந்து சுடுகாட்டை இப்படி ஆக்கிரமிப்பு செய்திருப்பது இந்த பூமியிலேயே இல்லாத செயலாகும். மேலும் சுடுகாட்டிற்கு பக்கத்தில் குடியிருக்கவே பயந்து வாழ்ந்த வந்த காலம் மாறி சுடுகாட்டையே வீடாக்கிய செயல் இந்த ஊரில்தான் நடந்துள்ளது. எனவே, மதுரை மாவட்ட கலெக்டர் இப்பிரச்னையில் தலையீடு செய்து சாப்டூர் பொதுமக்களுக்கு சுடுகாட்டை மீட்டுத்தர வேண்டும்’’ என்றார்.

Tags : fire ,Peraiyur ,house , Peraiyur, fire occupation, corpse
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா