×

விநாயகர் சிலைகளை பெண் உடைத்த விவகாரம்: பக்ரைன் போலீஸ் எடுத்த நடவடிக்கைக்கு இந்திய தூதரகம் வரவேற்பு

மனமா: விநாயகர் சிலைகளை  உடைத்த பெண் மீது நடவடிக்கை எடுத்துள்ள பக்ரைன் அரசுக்கு இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுக்க வாழும் இந்து மக்கள் விநாயகர் சிலைகளை வாங்கி பூஜை செய்வது வழக்கம் . பக்ரைன் நாட்டில் 4 லட்சம் இந்தியர்கள் வசித்து வருவதால், அந்த நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டி வருகிறது. மார்கெட்டுகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பக்ரைன் தலைநகர் மனமாவின் புறநகர் பகுதியான சூஃபைர் என்ற இடத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இந்த சூப்பர் மார்கெட்டுக்கு வந்த பெண்கள் இருவர் அங்கு விற்பனைக்கு விநாயகர் சிலைகளை கண்டு கோபமடைந்தனர். அதில், ஒரு பெண் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கோபத்துடன் எடுத்து தரையில் போட்டு உடைத்தார். மேலும், இது நபிகள் பிறந்த மண், இங்கு இது போன்ற விஷயத்தை அவர் அனுமதிப்பாரா? என்று அராபிய மொழியில் கோபமாக அவர்  கத்தினார். விநாயகர் சிலைகளை அந்த பெண் உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலனாது. இதையடுத்து, விநாயகர் சிலைகளை உடைத்த பெண்ணை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பக்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ குறித்து, பக்ரைன் போலீஸ் ஆய்வு செய்தது. வீடியோவில் 54 வயதான பெண் ஒருவர் வேண்டுமென்றே சிலைகளை சேதப்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து  அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். மத துவேசத்தை பரப்பும் செயலை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பக்ரைன் போலீஸ் எடுத்த நடவடிக்கைக்கு இந்திய தூதரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. பக்ரைன் நாட்டின் மத சகிப்புத்தன்மையை எடுத்துக் காட்டும் விதத்தில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் சொல்லப்பட்டுள்ளது.



Tags : embassy ,Indian ,Bahraini , Ganesha Statue, Woman, Bahrain, Police, Embassy of India
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...