×

ஊட்டி நகரில் சுற்றித்திரிந்த குதிரைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு

ஊட்டி: ஊட்டி நகரில் உணவின்றி சுற்றி திரிந்த குதிரைகள் தன்னார்வலர்கள் மூலம் பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஊட்டியில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பலர், பந்தயங்களில் பங்கேற்று ஓய்வு பெற்ற பந்தய குதிரைகளை வாங்கி வந்து குதிரை சவாரிக்கு பயன்படுத்தி வருகின்றனர். அவற்றால் பயன் இல்லாத போது அவற்றை பராமரிக்காமல் சாலையில் விட்டு விடுகின்றனர். இதனால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள சிறு வியாபாரிகள், குதிரை வைத்து சவாரி தொழில் செய்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குதிைர சவாரி தொழில் செய்பவர்கள் வருமானமில்லாததால் தங்களிடம் உள்ள குதிரைகளை பராமரிக்க முடியாமல் அவற்றை பொது இடங்களில் விட்டு விட்டனர். இதனால் படகு இல்ல சாலை, கலெக்டர் அலுவலக வளாகம், மத்திய பஸ் நிலையம், லோயர் பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பந்தய குதிரைகள் சாலையில் உலா வருகின்றன.  இவற்றில் சில வாகனங்களில் அடிப்பட்டு காயங்களுடன் உலா வருகின்றன. இப்பிரச்னை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து சாலையில் சுற்றும் குதிரைகளை காப்பகங்களில் வைத்து தற்காலிகமாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து படகு இல்லம் பகுதியில் சுற்றி திரிந்த குதிரைகளை தன்னார்வ அமைப்பினர் பிடித்து ஊட்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்திற்கு நேற்று கொண்டு வந்தனர். பின்னர் லாரி மூலம் குதிரைகளை காப்பகங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு சில குதிரை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் குதிரைகள் லாரியில் ஏற்றப்பட்டு மாவனல்லா பகுதியில் உள்ள காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவற்றை பராமரிப்பதற்கு ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் குறைந்தவுடன் மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Tags : Ooty ,Wandering Horses Archive , Ooty, Horses Archive
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்