கலிஃபோர்னியாவில் வரலாறு காணாத வெப்பம்!: Death valley-யில் 130 டிகிரி ஃபாரன்ஹீட் அனல்.. காடுகள் அழிப்பே காரணம் என ஆய்வாளர்கள் குற்றச்சாட்டு..!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறதோ இல்லையோ அந்நாட்டின் கலிஃபோர்னியா மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு அனல் பதிவாகியுள்ளது. அங்குள்ள Death valley தேசிய பூங்காவில் 130 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்கு கடலோர பகுதிகளில் கடுமையான வெப்ப அனல் வீசி வரும் சூழலில் இந்த அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவரை பூமியில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையில் இதுவே அதிகபட்சம் என தெரிவிக்கும் வானிலை ஆய்வாளர்கள், காடுகள் அழிக்கப்படுவதே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இத்தகைய வெப்பம் குறித்து பென்சில்வேனியா பல்கலைக் கழகம் தெரிவித்ததாவது, அமேசானில் எரித்து அழிக்கப்படும் வன பகுதிகள் வளிமண்டலத்தில் அதிக அளவு கார்பன் கலக்க காரணமாக உள்ளது. இதனால் நமது பூமியில் மேலும் வெப்பம் அதிகரித்து வருகிறது. அமேசானில் காடுகள் எரிக்கப்படுவதும், ஆஸ்திரேலியாவில் வனங்கள் எரியூட்டப்படுவதும் நமக்கு தெரிந்ததே. இதனால் எரிபொருளில் ஏற்படும் கார்பன் அளவை விட, ஆஸ்திரேலியாவில் இருமடங்கு கார்பன் வளிமண்டலத்தில் கலக்கிறது. நாம் தான் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக இருக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பூமியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 129.2 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும். இதுவும் 2013ம் ஆண்டு Death valley-யில் தான் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ அம்மாநிலத்தில் வெப்பத்தின் விழுக்காட்டை மேலும் அதிகரித்துள்ளது. தனது வழியில் உள்ள அனைத்தையும் அழித்தபடி முன்னேறி வரும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர கலிஃபோர்னியா மாநில தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

Related Stories:

>