×

13 பேர் பலியானதற்கு கிடைத்தது நீதி.. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை என ஐகோர்ட் சிறப்புமிக்க தீர்ப்பு; பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்!!

சென்னை:  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு 815 பக்க தீர்ப்பை வழங்கியது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்துள்ளது. மேல்முறையீடு செய்யும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரியத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

வழக்கின் பின்னணி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் வாதிடும்போது, தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர வேறு வழி இல்லை. மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் தூத்துக்குடி சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் விதிகளை தொடர்ந்து பின்பற்ற மறுத்ததன் காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. கடந்த காலத்தில் விதிகளை பின்பற்றாததற்காக ஆலை நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.100 கோடி அபராதம் விதித்தது அதற்கு சான்றாகும் என்று வாதிட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டால் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு செயல்படுவோம் என்றும் கூடுதல் கட்டுப்பாடு விதித்தாலும் அதை பின்பற்ற தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக அரசு தரப்பு, ஆலை நிர்வாகம் தரப்பு, இடையீட்டு மனுதாரர்கள் தரப்பு என 39 நாட்கள் நடந்த அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி 8ம் தேதி நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.


Tags : death ,Thoothukudi Sterlite ,plant ,iCourt ,Tuticorin ,opening ,shooting , Thoothukudi, Sterlite, Plant, Prohibition, Icord, Special, Judgment, Fireworks
× RELATED விவசாயியை அடித்து கொலை செய்த வழக்கு அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது