×

கிருஷ்ணகிரி ஜி.எச்.சில் கொடூரம் வீல் சேரில் இருந்து நோயாளியை தள்ளிவிட்ட மருத்துவ பணியாளர்: வாட்ஸ் அப்பில் வீடியோ வைரல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உள்நோயாளியை வீல்சேரில் இருந்து ஊழியர் கீழே தள்ளிவிடும் வீடியோ, வாட்ஸ் அப்பில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு சில ஊழியர்கள் குண்டர்களை போல் செயல்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்திய  கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர் கண்ணு, மருத்துவமனை நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி பொதுமக்கள் மற்றும் நோயாளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக  சிகிச்சை பெற்று வரும் முதியவர் ஒருவரை, மருத்துவமனை பணியாளர் ஒருவர் சக்கர நாற்காலியில் அழைத்து வந்து, கட்டிலின் அருகே நிறுத்துகிறார். பிறகு எழுந்து கட்டிலுக்கு செல்லுமாறு நோயாளியை  வற்புறுத்துகிறார். ஆனால், தாமாக எழுந்து கட்டிலுக்கு செல்ல முடியாமல்  தவிக்கும் நோயாளி, ஊழியரை உதவிக்கு அழைக்கிறார்.

ஆனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த பணியாளர், நோயாளியிடம் ஆபாசமாக பேசி, தகராறு  செய்தவாறு அவரை கீழே தள்ளிவிட்டு வீல் சேரை தள்ளிக்கொண்டு செல்கிறார். இவ்வாறு அந்த காட்சி முடிகிறது. இதை  அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரவ விட்டுள்ளார்.  இது தற்போது கிருஷ்ணகிரி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. ஊழியர் மீது நடவடிக்கை: இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பரமசிவன் கூறுகையில், ‘நோயாளியிடம் மனிதநேயம் இல்லாமல் நடந்து கொண்ட மருத்துவமனை ஊழியர் பாஸ்கரன், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது,’ என்றார். மனித உரிமை ஆணையம் உத்தரவு: நோயாளியை சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளிய விவகாரம் குறித்து ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் துறை இயக்குநர் 3 வாரத்தில் பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

Tags : patient , Krishnagiri, GH Atrocities, Wheelchair, Patient, Medical Worker, WhatsApp, Video Viral
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...