×

தமிழக அரசு அறிவித்த இ-பாஸ் தளர்வு காரணமாக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை வருவதால் பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல்: சென்னையில் இருந்து செல்வோரும் அதிகரிப்பு

சென்னை: கொரோனா நோய் பரவல் காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கினர். இதன் காரணமாக, பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. கொரோனா தொற்றால் சென்னையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமானது. இதனால் உயிர் பயத்தில் பலர் வீடுகளை காலி செய்துவிட்டு இ-பாஸ் பெற்றும், பெறாமலும் மற்ற மாவட்டங்களில் உள்ள தங்கள் ஊர்களுக்கு மூட்டை முடிச்சுகளுடன் படையெடுத்தனர். இதில் சிலர் சைக்கிளிலேயே பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீடுகளுக்கு சென்றனர். இந்நிலையில், இ-பாஸ் முறையில் தளர்வுகளை பிறப்பித்து தமிழக அரசு அறிவித்தது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர்.

இதனால் நேற்று காலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்களில் வந்த கட்டிட மற்றும் கம்பெனி தொழிலாளர்கள் இறங்கி நடந்து சென்றனர். அதேபோல சென்னையில் இருந்து வெளியூர் சென்ற மார்க்கத்திலும் வாகன எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பொதுமக்கள் கூறுகையில், “சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்ததால் உயிர் பயத்தால் சொந்த ஊர்களுக்கு சென்றோம். கொரோனா நிவாரணமாக அரசு வெறும் ரூ.1000 வழங்கியுள்ளது. இதை வைத்து என்ன செய்ய முடியும். பொருட்களை எல்லாம் அடகு வைத்து விட்டோம். மீண்டும் பிழைப்பு தேடி சென்னை வந்துள்ளோம். எனவே, அரசு ரூ.5000 நிவாரணம் வழங்க வேண்டும்” என்றனர்.

Tags : Paranur ,Tamil Nadu ,government , Government of Tamil Nadu, e-pass relaxation, hometown, Chennai, Paranur toll booth, congestion
× RELATED பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு...