×

அணையில் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீரில் சிக்கி 16 மணி நேரம் போராடிய வாலிபர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு: சட்டீஸ்கரில் பரபரப்பு சம்பவம்

பிலாஸ்பூர்: சட்டீஸ்கரில் அணையில் குளிப்பதற்காக குதித்த வாலிபர் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தட்டுத்தடுமாறி நடுவில் பாறை ஒன்றை பிடித்து மரக்கிளையை பிடித்தபடி 16 மணி நேரம் உயிருக்கு போராடிய அவரை விமானப்படையினர் விமானத்தில் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பருவமழை தீவிரமடைந்து வருவதால் வடமாநிலங்களில் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் பல அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள குடாகட் அணையும் நிரம்பியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருந்தது. இதில் ஜிதேந்திரா காஸ்யப் என்ற வாலிபர் குளிப்பதற்காக குதித்தாக கூறப்படுகிறது. தண்ணீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத அவர் இழுத்துச் செல்லப்பட்டார்.

ஆனாலும், சிறிது தூரத்தில் பாறை ஒன்றை பிடித்து அங்கிருந்த மரக்கிளையை பற்றிக் கொண்டு காஸ்யப் தண்ணீரில் அடித்துச் செல்லாமல் தப்பினார். இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதிகப்படியான தண்ணீரின் வேகம் மற்றும் இருட்டியதால் வாலிபரை மீட்க முடியவில்லை. அந்த வாலிபர் அங்கேயே சுமார் 16 மணி நேரம் விடிய விடிய உயிரை கையில் பிடித்தபடி ஓடும் தண்ணீருக்கு நடுவில் நின்று கொண்டிருந்தார்.

சாதாரணமாக அந்த வாலிபரை மீட்க முடியாது என்பதால் விமான படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலையில், விமானப்படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டர் அங்கு கொண்டு வரப்பட்டு மீட்புப் பணிகள் நடந்தன. இறுதியில் கயிற்றை இறக்கி, தண்ணீரில் சிக்கிய அந்த வாலிபரை விமானப்படையினர் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து பிலாஸ்பூர் போலீஸ் எஸ்பி பிரசாந்த் அகர்வால் கூறுகையில், ‘‘ரத்தன்பூரை சேர்ந்த காஸ்யப் என்ற வாலிபர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அப்போது மாலை நேரத்தில் வெளிச்சமின்மை காரணமாக, வாலிபர் எங்கு மாட்டிக் கொண்டார் என்பதை கண்டறிய முடியவில்லை.

இதனால் விமானப்படைக்கு தகவல் தெரிவித்தோம். அதிகாலை 5.49 மணிக்கு எம்ஐ-17 ஹெலிகாப்டர் ராய்ப்பூரில் இருந்து புறப்பட்டு இங்கு வந்தது. சுமார் 20 நிமிடம் மீட்புப் பணிகள் நடந்தன. 6.37 மணிக்கு வாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டார்’’ என்றார். மீட்கப்பட்ட காஸ்யப் ராய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறி உள்ளனர். ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீரின் நடுவே தைரியத்துடன் 16 மணி நேரம் தாக்குபிடித்து, மரத்தில் தொங்கி வாலிபர் உயிர் பிழைத்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : fighting ,dam ,riot ,Chhattisgarh , Dam, 16 hours, fought youth, helicopter, rescue, in Chhattisgarh
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...