×

கிராம ஊராட்சிகளில் பேக்கேஜ் முறையில் டெண்டர் விட தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக பேக்கேஜ் டெண்டர் விடும் முறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலை ஊராட்சி மன்ற தலைவர் ஜெ.கோவர்தனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019ல் நடந்தபோது திருவள்ளூர் மாவட்டம் சேலை ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் சம்மந்தப்பட்ட ஊராட்சி அமைப்புகளுக்கே நிர்வாகம் செய்ய அதிகாரம் உள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் சாலைகள் அமைத்தல், பராமரித்தல், பாலங்கள் பராமரிப்பு, சிறு பாலங்கள் அமைத்தல் போன்றவை ஊராட்சிகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

சேலை ஊராட்சிக்கு கடந்த ஜனவரி மாதம் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தனி அதிகாரிகள் தொடர்ந்து அதிகாரத்தை வைத்திருப்பது சட்ட விரோதமானது. இந்நிலையில், சேலை ஊராட்சி நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் திருவள்ளூர்  மாவட்ட கிராம வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் எங்கள் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் சாலை பணிக்கான பேக்கேஜ் டெண்டரை ஜூலை 29ம் தேதி அறிவித்துள்ளார். இந்த தகவல் எங்களுக்கு ஆகஸ்ட் 4ம் தேதிதான் தெரிய வந்தது. எனவே, ஊராட்சிகளின் ஒப்புதல் பெறாமலும், விதிமுறைகளுக்கு எதிராகவும், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்திற்கு முரணாகவும் வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் திலக்ராஜ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் குறிப்பிட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட கிராமப்புற வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் ஜூலை 29ம் தேதியிட்ட டெண்டர் நோட்டிபிகேசனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. கிராமப்புற வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் ஜூலை
29ம் தேதியிட்ட டெண்டர் நோட்டிபிகேசனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.


Tags : ICC , Village panchayat, package system, ban over tender, iCourt order
× RELATED ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1