×

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வழக்கு; விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீரப்பு அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மே மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019 பிப்ரவரி 27ல் வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் ஆலை திறப்பு கோரிக்கையை எதிர்க்கும் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை பாத்திமா, அர்ஜூனன்,  மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு நிர்வாகி ஹரி ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜூனன் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதிகள் ட்டி.எஸ்.சிவஞானம், வி. பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். 39 நாட்கள் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கின் வாதங்களை பொறுத்தவரையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்; தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர வேறு வழி இல்லை என்றும், மக்களுக்கு ஒரு சுத்தமாக காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார். ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் காற்றின் திறன் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் வாதிட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் கடந்த காலங்களில் விதிகளை பின்பற்றத்தற்காக ஆலை நிர்வாகத்துக்கு 100 கோடி ரூபாய் அபாரம் விதித்தது குறித்து அதற்கான சான்றும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டது. மேலும் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்துக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வேதாந்தா நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது. மேலும் ஆலை தொடங்கிய 1997-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை அவர்கள் 20 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு இரு தரப்பு வாதங்களுக்கு நிறைவு பெற்றுள்ள நிலையில் தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நாளை நீதிபதிகள் சிவஞானம், பவானிசுப்புராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க இருக்கிறது.


Tags : plant ,I-Court ,Sterlite ,trial ,Chennai , Sterlite Plant, Judgment, Chennai iCourt
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...