×

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பு, செயல்பாட்டுத் திறன் பற்றி யாருக்கும் தெரியாது: நோபல் பரிசு விஞ்ஞானி கவலை

மெல்போர்ன்: ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் அந்த மருந்தின் செயல்பாட்டுத் திறன், பாதுகாப்புப் பற்றி யாருக்கும் தெரியாது என்று நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி பீட்டர் டோஹெர்டி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள மைக்ரோபயாலாஜி மற்றும் நோய்தடுப்புவியல் பிரிவில் பீட்டர் டோஹர்டி பணியாற்றி வருகிறார்.

உலகிலேயே கொரோனா வைரசுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்தது. அந்த தடுப்பு மருந்து உடலில் நிலையான எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தி வருவதாகவும், திறன்மிக்க வகையில் கொரோனாவுக்கு எதிராகச் செயல்படுவதாக அதிபர் புதின் அறிவித்தார். ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்கு செல்லவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தை செலுத்தினார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். ஆனால் உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிஸ்-5 கொரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை. உலக சுகாதார அமைப்பும் இந்த மருந்தை அங்கீகரிக்கவில்லை.

ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிஸ்-5 கொரோனா தடுப்பு மருந்தில் இருக்கும் கவலைக்குரிய அம்சமே அதன் பாதுகாப்பும், செயல்பாட்டுத் திறனும்தான். ஒருவேளே நாம் சந்தேகப்படும்வகையில் அமைந்தால், இந்த தடுப்பு மருந்தை மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பு மருந்துகளையும் நாம் மறுக்க வேண்டியது வரும். ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து எவ்வாறு கிளினிக்கல் பரிசோதனைக்கு வராமலே கண்டுபிடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, மருந்தின் பாதுகாப்பு , செயல்திறன் என்ன என்பது பற்றித்தான் இப்போது இருக்கும் கவலை என்று பீட்டர் டோஹர்டி தெரிவித்தார்.



Tags : No one ,Russia ,scientist ,Corona , Russia, Corona, Nobel Prize
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...