×

நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியது தங்கம் விலை: ஒரே நாளில் சவரன் ரூ.200 குறைந்து ரூ.40,600க்கு விற்பனை!!

சென்னை: தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில், தங்கம் விலை மட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டேபோனது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதற்கு முந்தைய நாளான மார்ச் 23ம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை சவரனுக்கு ரூ.11,712 வரை அதிகரித்தது. கடந்த 7ம் தேதி ஒரு கிராம் ரூ.5,416க்கும் பவுன் ரூ.43,328க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது.

தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த 8ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கி உள்ளது. கடந்த 8ம் தேதி ஒரு சவரன் ரூ.43,080, 10ம் தேதி ரூ.42,920, 11ம் தேதி ரூ.41,936க்கும், 12ம் தேதி ரூ.40,832, 13ம் தேதி ரூ.40,608க்கும் விற்கப்பட்டது. குறைந்து வந்த தங்கம் திடீரென 14ம் தேதி அதிகரித்தது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.5,100க்கும், பவுன் ரூ.40,800க்கும் விற்கப்பட்டது.

15ம் தேதி சுதந்திர தினம் விடுமுறை, 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்கள் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டது. இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை மீண்டும் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.29 குறைந்து ஒரு கிராம் ரூ.5,071க்கும், சவரனுக்கு ரூ.232 குறைந்து ஒரு சவரன் ரூ.40,568க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.40,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து, ரூ.5,075-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு குறைந்து ரூ.74.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Shaver ,buyers ,Jewelry , Gold Price, Chennai, Sale
× RELATED வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம்...