×

பக்தர்கள் வருகையில்லை: பழநி வீதிகளில் பசியில் தவிக்கும் ஆதரவற்றோர்

பழநி: தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எப்போதும் பக்தர்கள் வருகை இருப்பதால் தங்கள் வீடுகளில் பராமரிக்க முடியாமல் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பலர் பழநியில் விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். தங்களது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பலர் தாங்களாகவேகூட பழநி வந்து விடுகின்றனர்.

இவர்கள் பக்தர்கள் அளிக்கும் உணவுகள் மற்றும் இங்குள்ள அன்னதான மடங்களில் வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு, சாலையோரங்களில் படுத்து வாழ்க்கையை கழித்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 19ம் தேதியில் இருந்து பழநி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமுதல் பழநி நகரில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்கள், மனநோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உணவின்றி அல்லல்பட்டு வருகின்றனர். இடைபட்ட காலத்தில் பழநி நகரில் சுற்றித்திரிந்தவர்கள் தினகரன் செய்தி எதிரொலியால் வருவாய்த்துறையினரால் மீட்கப்பட்டு, தெற்கு கிரிவீதியில் உள்ள நாதஸ்வர பள்ளி கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தனர்.

எனினும், ஏராளமானோர் தற்போதுகூட பஸ்நிலையம், கிரிவீதி போன்ற இடங்களில் உணவின்றி பசியால் வாடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து ஆதரவின்றி சுற்றித்திரிபவர்களை மீட்டு வாழ்வளிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Devotees ,streets ,Palani , Devotees do not come, Palani street, helpless
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்