×

நளினியை புழல் சிறைக்கு மாற்றக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை:  ராஜூவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை, புழல் சிறைக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட நளினி, வேலூர் சிறையில் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது தாயார் பத்மா அவ்வப்போது சென்னையிலிருந்து வேலூர் சென்று நளினியை பார்த்து வருகிறார்.

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தாயார் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதாவது நளினியை வேலூரில் உள்ள பெண்கள் சிறையிலிருந்து, சென்னையில் உள்ள புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும், தான் வயதானவர் என்பதால் வேலூர் சென்று தனது மகளை காண்பது சிரமமாக உள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஏற்கனவே இந்த மனுவினை சிறைத்துறையிடம் கடந்த மாதம் அளித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை மனுவினை சிறைத்துறை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை என்பதாலும், தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

எனவே உயர்நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. இதனையடுத்து நளினி தரப்பு வழக்கறிஞர் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் சிறைத்துறை மற்றும் தமிழக அரசு வழக்கு தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளனர்.

Tags : jail ,government ,Tamil Nadu ,Nalini ,ICC ,transfer , ICC court orders Tamil Nadu government to respond to Nalini's transfer to Pulhal jail
× RELATED புழல் சிறைச்சாலையில் செல்போன் பறிமுதல்