×

சாயல்குடி அருகே கடற்கரையில் சிதறி கிடக்கும் பழைய துணி: கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவதால் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம்

சாயல்குடி: சாயல்குடி அருகே உள்ள மாரியூர் கடற்கரையில் சடங்குகள் செய்தபின் உடைகளை களைந்து போட்டு வருவதாலும், கடல் புற்கள் குவிந்து கிடப்பதாலும் கடல் மாசடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. சாயல்குடி அருகே உள்ளது மாரியூர். இங்கு புகழ்பெற்ற பழங்கால கோயிலான பூவேந்தியநாதர், பவளநிறவள்ளியம்மன் கோயில் உள்ளது. மாவட்டத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி சேதுக்கரை, தேவிபட்டணம் ஆகிய புனித கடற்கரைகளுக்கு அடுத்தப்படியாக மாரியூர் கடற்கரை விளங்குகிறது. இங்கு கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி ஆகிய தாலுகா மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் விரதக்காலங்கள், கோயில்களுக்கு மாலையிடுதல் மற்றும் முன்னோர்களுக்கு சடங்குகள் செய்தல், பல்வேறு தோஷங்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய தினந்தோறும் நீராடி வருகின்றனர்.

அப்போது அவர்கள் அணிந்து வரும் உடைகளை கடற்கரையில் களைந்து போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் கடற்கரையில் சுகாதாரகேடு நிலவி வருகிறது. இதேபோன்று தற்போது வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் கடல் அலையில் அடித்து வரும் கடல் புற்கள் கரையோரம் குவிந்து கிடக்கிறது. ஓரிரு நாட்களில் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது. புற்கள் குவிந்து குப்பையாக காட்சியளிக்கிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இக்கடல் மன்னார் வளைகுடா உயிர்கோள கடல் என்பதால் பவளப்பாறை, டால்பின், சுறாவகை, கடல்பசு, கடல் ஆமை உள்ளிட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. கடற்கரையில் கிடக்கும் துணிகளை, கழிவுகளை இழுத்து செல்வதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் உடைகளை கடற்கரையில் விட்டுச்செல்ல மீன்வளத்துறை, பஞ்சாயத்து நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். கடற்கரையோரம் குப்பைபோன்று சிதறி கிடக்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாரியூர் பஞ்சாயத்து செயலாளர் முத்துமுருகன் கூறும்போது, மாரியூர் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் துணிகள், கழிவு பொருட்களை போட வேண்டும். இதேபோன்று கடற்கரையில் சுகாதாரகேடு விளைவிக்கும் வகையில் சடங்குகள் செய்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Sayalgudi ,beach ,sea , Sayalgudi, beach, scattered old cloth
× RELATED சீனாவில் உலக பாராபீச் வாலிபால்...