×

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பனிக்குள் விழுந்த ராணுவ வீரர் உடல் 7 மாதங்களுக்கு பின் மீட்பு

குல்மார்க்: ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பனிக்குள் விழுந்த ராணுவ வீரரின்உடல் 7 மாதங்களுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சாமோலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிங் நேகி(36), கடந்த 2001ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்து கார்வால் ரைபிள்ஸ் பிரிவில், ஹவில்தாராக பணியாற்றினார். இவரது மனைவி ராஜேஸ்வரி தேவி, மூன்று குழந்தைகளுடன், உத்தரகண்டின் டேராடூனில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி 8ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பணியில் இருந்த ராஜேந்திர சிங் நேகி, அடர் பனிக்குள் விழுந்தார். அவரை, 3 மாதங்கள் வரை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், பணியில் வீர மரணமடைந்ததாக, ராணுவத்தினர் முடிவு செய்தனர்.

இதுகுறித்து, ஜூன் மாதம் அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ராணுவத்தின் முடிவை ஏற்க மறுத்த, அவரது மனைவி ராஜேஸ்வரி தேவி, கணவரின் உடலை பார்த்தால் மட்டுமே, அவர் மரணமடைந்தாக ஒப்புக் கொள்வேன், என கூறினார்.  இந்நிலையில், கார்வால் ரைபிள்ஸ் படை பிரிவினர், மாயமான ராஜேந்திர சிங்கின் உடலை எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பனிக்கட்டிகளின் அடியில், நேற்று முன்தினம் கண்டுபிடித்தனர். இதுகுறித்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக்குழுவினர் அங்கு வந்து, உடலை பதப்படுத்தி, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். நாளை மறுநாள், குடும்பத்தினரிடம், ராஜேந்திர சிங்கின் உடல் ஒப்படைக்கப்படும் என, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags : soldier ,Kashmir ,Jammu ,LoC ,Army , Jammu and Kashmir, ice, soldier, body
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...