பெலாரஸ் அதிபர் லூகெஷென்கோ பதவி விலக வலியுறுத்தி லட்சக்கணக்கானோர் திரண்டு போராட்டம்!: தேர்தலில் முறைகேடு செய்து வென்றதாக குற்றச்சாட்டு..!!

மின்ஸ்க்: முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டில் அதிபர் அலக்சாண்டர் லூகெஷென்கோ பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெலாரஸில் 26 ஆண்டுகளாக ஆட்சியில் நீடிக்கும் அதிபர் லூகெஷென்கோ கடந்த வாரம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிப்பெற்றார் என்பது எதிர்க்கட்சிகள் மற்றும் அந்நாட்டு மக்களின் குற்றச்சாட்டாகும். இதையடுத்து அதிபர் லூகெஷென்கோ பதவி விலக வலியுறுத்தி தலைநகர் மின்ஸ்க் உள்ளிட்ட நகரங்களில் லட்சக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மின்ஸ்க் நகரத்தில் உரையாற்றிய அதிபர் அலக்சாண்டர் லூகெஷென்கோ மறுதேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து லித்துவேனியா, லாத்வியா, போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளும் அதன் ஆட்சியாளர்களும் மறு தேர்தலை நடத்த எங்களை நிர்பந்திக்கின்றனர். அவர்கள் ஆணைப்படி நடந்தால் பாதாளத்தில் விழுந்து விடுவோம். நாடும், நாட்டு மக்களுக்கும் அழிவு பாதைக்கு தள்ளப்படுவோம் என குறிப்பிட்டார். அதிபர் லூகெஷென்கோ பதவி விலக திட்டவட்டமாக மறுத்துவிட்டதை அடுத்து, பெலாரஸில் மக்கள் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில் அதிபர் லூகெஷென்கோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ரஷ்யா அரசு, ராணுவ உதவிகளை செய்யவும் முன்வந்துள்ளது. இதனால் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories:

>