×

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறைகளில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்க தனி சட்டம்: முதல்வருக்கு வேல்முருகன் கோரிக்கை

பூந்தமல்லி: தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறை வேலைவாய்ப்புகளை மண்ணின் மைந்தர்களுக்கே வழங்க வேண்டும் என்றும், இதுகுறித்து தமிழக முதல்வர் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள வருமான வரித்துறை, என்எல்சி, வெடி மருந்து தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் தொடர்ந்து தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. வடமாநிலத்தை சேர்ந்த இந்தியை தாய்மொழியாக கொண்ட உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு திட்டமிட்டு இந்த வேலை வழங்கப்படுகிறது. கடந்த வாரம் கூட திருச்சியில் உள்ள ரயில்வே துறையில் உள்ள 450 பதவிகளில் 435 இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

ஆனால், இதுவரை தமிழக முதல்வர் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அந்தந்த மாநிலத்தில் உள்ள மத்திய அரசு பதவியில் 90 சதவீதம் அந்த மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தின் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை இயற்ற வேண்டும். இதற்கு, தமிழக முதல்வர் பதில் சொல்லவில்லை என்றால் அவரது வீட்டை நோக்கியும், தலைமை செயலகத்தை நோக்கியும் அறிவிப்பு இல்லாமல் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முற்றுகை இடுவோம். மேலும், முதல்வரை நடமாட விடாமல்  செய்வோம். அவரது வாகனத்தின் முன்பு அமர்ந்து மறியல் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : soil miners ,Central Government Departments ,Chief Minister ,Tamil Nadu ,Velmurugan , Tamil Nadu, Central Government Department, Soil Miner, Work, Separate Law, Chief Minister, Velmurugan Request
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...