×

அதிக தொகுதிகளை கேட்டு நிபந்தனை அதிமுகவுக்கு பாஜ நெருக்கடி: ஆட்சியில் பங்கு வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுக-பாஜ கூட்டணியில் உரசல் அதிகரித்து வருகிறது. எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்று கூறி வந்த பாஜ, இப்போது ஆட்சி வந்தாலும் பங்கு வேண்டும் என கேட்கிறது. அதிக தொகுதிகளை கேட்டு பெறுவதற்காகவே அதிமுகவுக்கு பாஜ இத்தகைய நெருக்கடிகளை கொடுத்துவருவதாக தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது கடந்த காலத்தில் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெற்றிருந்தது. பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 5 தொகுதிகளிலும் பாஜ தோல்வியை சந்தித்தது. பாஜவை கூட்டணியில் சேர்த்ததால்தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது என்று அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் இருந்த கட்சிகள் வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்தனர்.

அதே நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தான் பாஜ தோல்விக்கு காரணம் என்று பாஜ தலைவர்கள் கூறி வந்தனர். தொடர்ந்து அதிமுகவின் செயல்பாடுகளை கண்டித்து பாஜ தலைவர்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கினர். மத்திய அரசால்தான் அதிமுக ஆட்சி தமிழகத்தில் இன்னும் நீடித்து வருகிறது என்றும் பாஜவினர் வெளிப்படையாக கருத்துக்களை கூறி வந்தனர். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் ஒவ்வொரு கட்சியினரும் தயாராகி வருகின்றனர்.

அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். மத்திய அரசின் மக்களுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுக அரசு எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. மாறாக அவர்களுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று மக்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் அதிமுக, பாஜவுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க தயங்கி வருவதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க பாஜ தலைவர்கள் தமிழகத்தில் பாஜ தலைமையில் தான் கூட்டணி அமைப்போம் என்று கருத்து கூறி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி, “ தமிழகத்தில் திமுக-அதிமுக என்ற நிலை மாறி, திமுக-பாஜ என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் பாஜ தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்” என்று கூறினார்.

இதை இதுவரை தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் மறுக்கவில்லை. இதனால், வி.பி.துரைசாமி மாநில தலைவர் சொல்லி தான் பேசியிருக்கக்கூடும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. வி.பி.துரைசாமியின் கருத்து மற்றும் பாஜ தலைவரின் மவுனம் அதிமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் சில அமைச்சர்கள் பேட்டியளித்து வந்தனர். அதே நேரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன், “பாஜ கை காட்டுபவர்கள் தான் ஆட்சி கட்டிலில் அமருவார்கள். தமிழக அரசியலில் அடுத்த 6 மாதத்திற்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் “ என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ளார்.

மேலும் நாகர்கோவிலில் பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “ பாஜவை பொறுத்தவரை, வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும். பாஜ அங்கம் வகிக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் உருவாகும்” என்றார். இதையடுத்து சட்டசபை தேர்தலில் பாஜ தரப்பில் இருந்து அதிக இடங்கள் கேட்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம் ஒதுக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் இப்போதே நிபந்தனை போட தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன் வெளிப்பாடாக தான் பாஜகவில் ஒவ்வொருவரும் கருத்துக்களை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் பாஜவுக்கு அதிக இடங்களை ஒதுக்க ஒருபோதும் சம்மதிக்காது. இதனால் வரக்கூடிய தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெறுமா அல்லது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜ அரசுக்கு பயந்து அதிக இடங்களை ஒதுக்குமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜவுக்கு அதிக இடங்களை ஒதுக்க அதிமுக ஒருபோதும் சம்மதிக்காது. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் நிலவி வருகிறது.

Tags : crisis ,AIADMK ,BJP ,interview ,Pon.Radhakrishnan ,constituencies , High volume, conditional AIADMK, BJP crisis, rule, Pon.Radhakrishnan, interview
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...