×

கும்மிடிப்பூண்டி கண்ணன்கோட்டையில் நீர்த்தேக்க கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியது

கும்மிடிப்பூண்டி: கண்ணன்கோட்டை நீர்த்தேக்க கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கண்ணன்கோட்டையில் தமிழக அரசு சார்பில், ரூ.380 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த 2011ம் ஆண்டு துவங்கியது. ஈசாராஜன் ஏரியுடன் தேர்வாய் ஏரியை இணைத்து நீர்த்தேக்கம் அமைத்து கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னைக்கு 1 டி.எம்.சி தண்ணீர் கொண்டு செல்வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்துக்காக 800 ஏக்கர் பட்டா நிலம், 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கால்வாய் மற்றும் கரைகள் அமைக்கும் பணி என கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. இதனால் நீர்த்தேக்க திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளனர். கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தை பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன், பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்ணன்கோட்டை நீர்த்தேக்க திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்கள், நீர் தேக்க பகுதி, கரைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

* சென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், “கண்ணன்கோட்டை நீர்த்தேக்க பணி விரைவில் முடிக்கப்பட்டு, சென்ைன மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டம் சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாகும்” என்றார்.

Tags : reservoir ,Gummidipoondi Kannankottai ,completion , Gummidipoondi, Kannankottai, Reservoir construction work, final stage, close
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு