×

சூளகிரி அருகே பரபரப்பு ஒற்றை யானை தாக்கி 2 பேர் பலி: சடலத்துடன் பொதுமக்கள் மறியல்

சூளகிரி: சூளகிரி அருகே ஒற்றை யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை சுற்றித்திரிகிறது. இந்நிலையில், நேற்று காலை புலியரசி கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, விவசாய தோட்டத்திற்குள் நுழைந்து பயிர்களை துவம்சம் செய்தது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் முனிராஜ்(28) என்பவர், தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். புதருக்குள் மறைந்திருந்த ஒற்றை யானை திடீரென வெளியே வந்ததை கண்டு அலறியடித்து ஓடினார். ஆனால், அவரை சுற்றிவளைத்த யானை, துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த முனிராஜ் துடி துடித்து உயிரிழந்தார்.

பின்னர் அங்கிருந்து சென்ற யானை, அருகில் உள்ள ஜோகிரிபாளையம் கிராமத்திற்குள் புகுந்தது. அப்பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் ராஜேந்திரன்(40) என்பவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக தோட்டத்து பக்கம் சென்ற போது, ஒற்றை யானையிடம் சிக்கிக்கொண்டார். யானை தாக்கியதில் படுகாயடைந்த ராஜேந்திரன் கதறி துடித்தார். அப்பகுதியினர் ராஜேந்திரனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், முனிராஜ் சடலத்தை சூளகிரி- பேரிகை சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

ராயக்கோட்டை வனத்துறையினர் மற்றும் சூளகிரி போலீசார், தாசில்தார் பூவிதன், வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன் உள்ளிட்டோர் வந்து சமரசப்படுத்தினர். யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.உயிரிழந்த முனிராஜூக்கு சமீபத்தில் தான் திருமணமானது. அவரது மனைவி சரோஜா(25) 3 மாத கர்ப்பமாக உள்ளார். ராஜேந்திரனுக்கு சிவகாமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Tags : elephant attack ,Choolagiri , Choolagiri, single elephant attacked, 2 killed, with corpse, public stir
× RELATED காரில் கொண்டு சென்ற ₹1.67 லட்சம் பறிமுதல்