×

விழுப்புரம் காவலர் குடியிருப்பில் பயங்கரம் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை: பணிச்சுமை காரணமா? டிஐஜி, எஸ்பி நேரில் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் போலீஸ் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் அருகே ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகன் ஏழுமலை(25). பிஇ பட்டதாரி. கடந்த 2017ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டு, விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். தற்போது, எஸ்பி குடியிருப்பு முகாம் அலுவலகத்தில் கார்டு பணியில் (காவல் பணி) இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிவடைந்து, கா.குப்பம் காவலர் குடியிருப்பில் ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். ஆனால், அதற்கு முன் ஆயதப்படையில் ரிப்போர்ட் செய்துவிட்டு, துப்பாக்கியை ஒப்படைக்கவில்லை. இதனால் அதிகாரிகள், அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். செல்போன் சுவிட்ச் ஆப்பில் இருந்துள்ளது.

இந்தநிலையில், நேற்று காலை ஏழுமலை குடியிருப்பில் இருக்கிறாரா என்று போலீஸ்காரர் தங்கம் என்பவரை அனுப்பி வைத்து பார்த்தபோது படுத்து தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அவரிடம், எதற்காக ரிப்போட் செய்யவில்லை தங்கம் என்று கேட்டதற்கு, உடல்நிலை சரியில்லை, மாத்திரை போட்டுள்ளேன், சிறிது நேரத்தில் வந்து விடுவதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகு, அவர் ஆயுதப்படைக்கு செல்லவில்லை. இதையடுத்து, போலீஸ்காரர் தங்கம் மீண்டும் அவரது அறைக்கு வந்தபோது கதவு, ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை.

பின்னர், ஜன்னலை உடைத்து பார்த்தபோது ஏழுமலை தலையில் தோட்டா பாய்ந்து உயிரிழந்து கிடந்தார். அவரது அருகில் துப்பாக்கி ஒன்றும் கிடந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், டி.ஐ.ஜி. எழிலரசன், எஸ்.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் நிபுணர்களும் சென்று தடயங்கள் சேகரித்தனர். அதன்பின், பிரேத பரிசோதனைக்காக அவரது சடலத்தை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* எஸ்.ஐ. மிரட்டல்
ஏழுமலை தற்கொலை குறித்து, ஆயுதப்படை போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘ஏழுமலை ஏற்கனவே உடல்நிலை சரியில்லாததால் காவல் பணியை பெற்று, ஈடுபட்டு வந்தார். ஆனால், ஆயுதப்படையில் ஓ.எஸ். பிரிவில் பணியாற்றும் எஸ்.ஐ. ஒருவர், நேற்று முன்தினம் லாக்டவுன் டூட்டிக்கு அழைத்துள்ளார். இதனால் எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் காவல் பணியிலிருந்து விடுவித்து, அனுப்பியுள்ளனர். ஏழுமலைக்கு காவல் பணி இனி வழங்கப்படாது என்று எஸ்.ஐ. மிரட்டியதால், முகாம் அலுவலகத்திலிருந்து வந்த ஏழுமலை மன உளைச்சலுடன் இருந்துள்ளார். அந்த மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம்’ என்று கூறப்படுகிறது.

Tags : policeman ,police station ,Villupuram ,DIG ,SP ,Investigation , Villupuram, police station, terror, shot, policeman commits suicide
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...